எம்.எஸ்.எஸ்.பாண்டியன் – எஸ்.வி.ஆர் இரங்கற் குறிப்பு

அனைத்திந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள தென்னாசிய ஆய்வாளர்களிடத்திலும் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞரும் வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான எம்.எஸ்.எஸ். பாண்டியன் இன்று மாலை டெல்லியிலுள்ள ஏஐஐஎம்எஸ் மருத்துவ மனையில் தமது 57ஆம் வயதில் காலமான செய்தி பேரதிர்ச்சியாய் என் செவிகளை வந்தடைந்தது.

ஏறத்தாழ முப்பதாண்டுகால நண்பரொருவரின் மறைவு என்பதைக் காட்டிலும், தமிழகப் பார்ப்பனரல்லாதார் மத்தியில் ‘வாராது வந்த மாமணிகளிலொருவராக’த் தோன்றி, தமிழகத்தின் சமகால அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியனவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்து வந்தவர் பாண்டியன் மறைந்துவிட்டார் என்னும் துக்கமே என் போன்றோரிடம் மேலோங்கி நிற்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்த அவருக்கு, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேரும் வரை ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ தெரியாது. தமது சொந்த முயற்சியின் மூலம் ஆங்கிலத்தில் புலமை பெற்ற அவர், எம்.ஐ.டி.எஸ். (Madras Institute of Development Studies) எனச் சொல்லப்படும் சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் பயின்று தமிழகத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலுள்ள நில உடைமை உறவுகளைப் பற்றிய மிகச் சிறப்பான ஆய்வினைச் செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

அந்த நிறுவனத்தில் சிறிது காலம் பணி புரிந்த பின், ஓராண்டுக்காலம் கோல்கத்தாவிலுலுள்ள சிஎஸ்எஸ்எஸ் (Centre for the Studies in Social Sciences) என்னும் சமூகவியல் ஆய்வுகளுகான மையத்தில் பணி புரிந்த அவர், மீண்டும் எம்ஐடிஎஸ்ஸுக்குத் திரும்பி வந்தார். கோல்கத்தாவில் இருந்த காலத்திலும் சரி, அதன் பிறகும் சரி, ‘கீழ்நிலை மாந்தர்’ கண்ணோட்டத்திலிருந்து வரலாறு எழுதப்படும் போக்கிற்கான (சபால்டெர்ன் ஸ்டடீஸ்) உந்து சக்திகளிலொருவராகத் திகழ்ந்தார். ‘ஸவுத் இன்டியன் ஸ்டடீஸ்’ என்னும் ஆய்வேட்டினை நிறுவி அதனை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கொண்டு வந்தார்.

இந்தியாவின் புகழ் பெற்ற வார ஏடான ‘எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி’யில்’ 1980களில் இடைப் பகுதியிலிருந்தே ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்தார். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்த அவரது அக்கறைகள், பண்பாட்டு ஆய்வுத் துறைக்கும் விரிவடைந்தன. எம்ஜிஆர் என்னும் நிகழ்வுப் போக்கு பற்றி அவர் ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’யில் எழுதிய கட்டுரை பின்னர் விரிவுபடுத்தப்பட்டு, ‘இமேஜ் ட்ரேப்’ என்னும் முழு நூலாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழகத்தில் பிற்பட்ட சாதியினர், தலித்துகள் மீது நடத்தும் தாக்குதல்களை இடை நிலை சாதியினரின் மேலாதிக்கமாகக் காணாமல், அவை அந்த இடை னிலை சாதியினரின் மேலாதிக்கம் சரிந்து வருவதற்கான அடையாளமாகவே காண வேண்டும் என்னும் புதிய பார்வையை அண்மையில் ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’க்கு எழுதிய கட்டுரைகளில் முன்வைத்தார்.

தந்தை பெரியாரையும் அவரது சுயமரியாதை இயக்கத்தையும் ஆங்கிலம் பேசும் உலகிற்கு எடுத்துச் சென்றவர்களிலொருவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். ‘பிராமின் நான் பிராமின்’ என்னும் அவரது ஆங்கில நூல் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. ஹவாய், கொலம்பியா, மின்னிஸொட்டா, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகங்களில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி ஜவர்கர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியேற்றார். மிகச் சிறப்பான ஆசிரியர் என மாணவர்களிடம் பெயரெடுத்த அவர், ஈழத் தமிழர் படுகொலைப் பிரச்சினையில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் அக்கறை காட்டும்படி செய்தார்.

அண்மையில் காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளின் பொருட்டு காஷ்மீரி, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து பொருள்களைத் திரட்டி அனுப்பி வைத்தார். எம்.ஐ.டி.எஸ்ஸில் இணைப் பேராசிரியாக உள்ள அவரது துணைவியார் முனைவர் ஆனந்தி, அருமை மகள் பிரீத்தி, அவரது தாயார், தங்கை ஆகியோருக்கு மட்டுமல்ல, தமிழக, இந்திய, தென்னாசியச் சிந்தனை உலகம் அனைத்துக்குமே பாண்டியன் பேரிழப்பை ஏற்படுதிவிட்டு மறைந்து விட்டார்.

Leave a Response