மீனவர்களுக்கு தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை: சீமான்

இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களுக்கும் தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை என சீமான் கூறியுள்ளார்.

ஐந்து தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் மரண தண்டனை தீர்ப்பைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

அப்போது, இலங்கை அரசுடனான மோடி தலைமையிலான இந்திய அரசின் நட்புறவை விமர்சித்த சீமான். தமிழக மீனவர்களுக்கு சிங்கள கடற்படையால் நிகழ்த்தப்படும் தொடர் அட்டூழியங்களை சுட்டிக் காட்டினார். மேலும், மீனவர்கள் தூக்கு விவகாரத்தில் இந்திய அரசின் தற்போதைய செயல்பாடுகளுக்கும் கண்டனங்களை தெரிவித்துகொண்டார்.

தொடர்ந்து பேசிய சீமான், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை என தெரிவித்தார். மீனவர்கள் தவறு செய்தால்தானே மன்னிப்பதற்கு? பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு எதற்கு மன்னிப்பு? எனவும் அவர் கேள்வியை அனுப்பினார்.

 

Leave a Response