இந்தியும் சமக்கிருதமும் படித்தால்தான் மருத்துவராக முடியுமா? – சீமான் ஆவேசம்

நீட் தேர்வால் தான் சிறுவயது முதல் நெஞ்சில் சுமந்துவந்த மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் போன சோகம் தாளாமல் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலம் அவரது சொந்தஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருவளூர் கிராமத்தில் நேற்று 06-06-2018 நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தினார். தங்கை பிரதிபாவை இழந்துவாடும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார். அப்போது கூறியதாவது…

கல்வி மருத்துவம், நீர், சாலை உள்ளிட்ட அனைத்துமே தனியார்மயம் என்றால் அரசாங்கம் எதற்கு? ஆந்திராவைப் போன்று நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றிருக்கவேண்டும். அதை அரசு செய்யத் தவறிவிட்டது. நீட் தேர்வினால் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்படும் அதனால் இதுபோன்ற பெருந்துயரங்கள் நிகழும் என்ற பயத்தில் தான் நாங்கள் தொடக்கம் முதலே எதிர்த்து போராடிவருகின்றோம்.

பல ஆண்டுகளாக கல்வியே மறுக்கப்பட்ட இனத்தின் பிள்ளைகள் நாங்கள் இப்போதுதான் கல்வியில் முன்னேறிவருகின்றோம். இன்னும் முழுமையாக கல்வி எங்களை வந்து சேரவில்லை. ஓராசிரியர் அனைத்து பாடங்களையும் கற்பிக்கும் பள்ளியில் இருந்து வந்த ஒரு மாணவன் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிதனி ஆசிரியர்கள் கற்பிக்கும் பள்ளியில் இருந்து வரும் மாணவனுடன் எப்படி போட்டிபோட முடியும்? வசதிகள் நிறைய உள்ள பள்ளியில் பயிலும் மாணவனுக்கும் எந்த வசதியும் இல்லாத பள்ளியில் பயிலும் மாணவனும் ஒரே மாதிரியான பொதுத்தேர்வெழுத சொல்வது எப்படி ஏற்புடையதாகும்.

கிராமப்புறங்களில் படிக்கும் மாணவன் சென்னை போன்ற பெருநகரங்களில் திறமையான ஆசிரியர்களின் பயிற்சியின் கீழ் படிக்கும் மாணவனோடு எப்படி போட்டி போடமுடியும்? சரியான சாலைவசதி, மின்சாரம், மருத்துவ வசதி, அருகாமைப் பள்ளிக்கூடங்கள் இல்லாமல் பல இன்னல்களுக்கு இடையே படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கென்று தனிப்பயிற்சி பெறுவது அதில் வெற்றிபெறுவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

தமிழ்வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பிழையாக மொழிமாற்றம் செய்த வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில் 90க்கும் மேற்பட்ட அச்சுப்பிழைகள் இருந்தால் அதை சரியாக கணிப்பதற்குள்ளாகவே தேர்வு நேரம் முடிந்துவிடும். இராஜஸ்தானில் அதிக தேர்வு மையம் வைத்து அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளனர். தமிழக மக்களின் மருத்துவ தேவைக்காகவும், தமிழக மாணவர்களின் மருத்துவம் படிப்பிற்காகவும் பயன்படும் என்ற உயரிய நோக்கில் நமது வரிப்பணத்தில் கட்டமைக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இப்போது வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்கள் பெருமளவில் படிக்கும் நிலை உருவாகிவிட்டது. இதனால் நம் பிள்ளைகளின் மருத்துவக் கனவு கலைக்கப்பட்டு நமது நோக்கமும் வரிப்பணமும் வீணாகி யாருக்கோ உலகின் ஏதோ ஒரு மூலையில் வர்த்தகமாகப்போகிறது. மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சேர்ந்து இந்தியும் சமஸ்கிருதமும் படித்தால் தான் மருத்துவராக முடியும் என்ற நிலைக்கு ஒரு தேசிய இனத்தை தள்ளுகிறது. இதனால் ஒரு தேசிய இனத்தின் மொழியும் வரலாறும் அந்த தேசிய இனத்தின் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கற்பிக்கமுடியாத நிலை ஏற்படும். ஒரு தேசிய இனத்தின் மொழியும் வரலாறும் மறைக்கப்படுவது அந்த இனத்தின் மீது தொடுக்கப்பட்ட போருக்கு ஒப்பாகும். நீட் தேர்வு என்பதும் ஓர் இன அழிப்பு போராகத்தான் பார்க்கவேண்டிய தேவையுள்ளது.

சுதந்திரநாள் விழா உரையில், விடுதலைப்பெற்ற 70 ஆண்டுகால இந்தியாவில் மின்சாரமே போய்ச்சேராத பல்லாயிரம் கிராமங்கள் இருக்கின்றன என்று வருத்தத்துடன் பதிவுசெய்கிறார் பிரதமர். அந்த கிராமத்தில் இருந்து ஒருவன் எப்படி நீட் தேர்வுக்கும் மின்னணு பணபரிமாற்றதிற்கும் எப்படி தயாராகி வரமுடியும்? விடுதலைப்பெற்ற இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டுவிட்டதா? நாடு முழுமைக்கும் தரமான சமமான கல்வி கொடுக்கப்பட்டுவிட்டதா? இந்த நிலையில் அனைத்து மாணவர்களையும் பொது போட்டித்தேர்வுக்கு வரச்சொன்னால் எப்படி நியாயமாகும்?

பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மருத்துவப் படிப்பு படிக்கமுடியாதநிலை ஆனால் பனிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவப்படிப்பு படிக்கும் நிலை ஏற்படுகிறது. தேயிலை வடிகட்டி தேநீரின் சுவையைக் கூட்டிவிடும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் அதுபோன்றுதான் நீட் தேர்வு என்ற வடிகட்டி மட்டுமே தகுதியான மருத்துவர்களை உருவாக்கிவிடமுடியாது. மருத்துவம் பயிலுவதற்கு முன்பே இவர்கள் தான் தகுதியான மருத்துவர்கள் என்று எப்படி கூறிவிடமுடியும். நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஏற்கனவே நீட் தீர்வின்றி மருத்துவம் படித்த ஆசிரியர்கள் பாடம் கற்பித்து எப்படி தகுதியான மருத்துவர்களை உருவாக்கமுடியும்? பிறகெப்படி மருத்துவக் கல்வியின் தரம் உயரும்? இந்த கல்விமுறையே மிகவும் தவறானது. அதனால் தான் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். இப்படி போராடுவது தேசத் துரோகமாகிவிடுகிறது நாங்கள் தேசத்துரோகிகள் ஆகிவிடுகிறோம். இவற்றையெல்லாம் கடந்துதான் போராடவேண்டியுள்ளது.

– இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Leave a Response