கர்நாடக முதல்வரைச் சந்திப்பது எதற்கு? கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியைச் சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக-தமிழக ஒற்றுமைக்கும், காவிரி பற்றியும் எனது பேச்சு இருக்கும். அதையும் விட சில பேச்சுவார்த்தை கர்நாடக முதல்-மந்திரியுடன் பேச வேண்டியது இருக்கிறது. அதற்காகத்தான் பெங்களூரு செல்கிறேன். ஆனால் கண்டிப்பாக சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேச மாட்டேன்.

காவிரி தண்ணீரை விட வலியுறுத்தும் பலம் என்னிடம் இல்லை. நான் மக்களின் பிரதிநிதியாக கருத்துகளை எடுத்து சொல்ல முடியும். அவர் கூறும் கருத்துகளை இங்கு வந்து சொல்ல முடியும். காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. அந்த கருத்தின் அடிப்படையில்தான் என்னுடைய பயணத்தை நோக்கி செல்கிறேன்.

கர்நாடக முதல்-மந்திரியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எப்படி அமையும்? நம்முடைய கோரிக்கை என்ன? என்று ஊருக்கே தெரியும். இரு மாநிலங்களுக்கும் தெரியும். நமக்கு என்ன தேவை. அவர்களால் என்ன இயலும் என்பதை பேச உள்ளேன்.

சட்டமன்றத்துக்கு மீண்டும் தி.மு.க. செல்ல முடிவு செய்து இருப்பது நல்ல முடிவாகும். இது வரவேற்கத்தக்கது.

தூத்துக்குடி சம்பவம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் மீது செய்யப்படுவது விமர்சனம். அது அவருடைய கருத்து. நான் மக்களின் கருத்துகளை மக்களின் பிரதிநிதியாக பிரதிபலிக்கிறேன். நான் மக்களிடம் கேட்டு சொன்ன கருத்து ஒட்டுமொத்த மக்களின் எதிரொலிதான். நானாக எந்த கருத்தையும் சொல்லவில்லை.

கர்நாடகாவில் படங்கள் வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள், வர்த்தக அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை வியாபாரம் செய்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நான் வியாபார மன நிலையில் இல்லை. அது இப்போது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். அதை சம்பந்தப்பட்ட வியாபாரிகள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் சமூகவிரோதிகள் கிடையாது. அப்படிப் பார்த்தால் நானும் சமூகவிரோதிதான். போராட்டம் நடத்தினால் சுடுகாடு ஆகும் என்பது ரஜினிகாந்தின் கருத்து. ஆனால் என்னுடைய கருத்து வேறு. நான் காந்தியின் சீடன். அவரை பார்த்ததுகூட இல்லை.

காந்தி இறந்தபின் பிறந்தவன் நான். போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். அந்த தன்மை என்ன? என்று காந்தியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கத்தி, வாள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து செய்வது போராட்டம் கிடையாது.

துப்பாக்கி வந்தாலும் திறந்த மனதுடன் ஏற்கும் தன்மையை தூத்துக்குடியில் பார்த்தோம். தூத்துக்குடி போராட்டம் நல்ல ஒரு பாதையாக நினைக்கிறேன். அதில் வன்முறை இருந்திருந்தால் அதை இன்னும் நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். போராட்டங்களில் அந்த கறைக்கூட பதியாமல் இருக்க வேண்டும். போராட்டங்களை நிறுத்தமாட்டார்கள். நிறுத்தவும் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலை தனது எல்லையை கடந்து பேராசையினால் பல தவறுகளைச் செய்து இருக்கிறது. பெரிய ஆலைகள் வர வேண்டும் என்பது காந்தி, பாரதியின் கனவுகள். ஆனால் அவை மண்ணின் சட்டங்களை மதித்து நடக்கும் ஆலைகளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response