
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையை அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கண்டித்து வரும் நிலையில் காவலர் ஒருவரை சிலர் தூக்கிச்செல்லும் காணொலியை நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் வெளியிட்டு காவல்துறைக்கு ஆதரவான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
“போலீசார் மக்களை தாக்கியதையும், சுட்டதையும்தான் நாம் பார்த்தோம். ஆனால் போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யாருடைய பக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாம் எல்லோருமே தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதிப் போராட்டம் கலவரமானது எப்படி என்பது குறித்து தமிழக மக்களுக்கு பதில் தெரிய வேண்டும்” என்று டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்துள்ளன.
பாஜகவுக்கு விசுவாசமாக நடக்கிறீர்கள், தூத்துக்குடியில் காவல்துறையினர் யாரும் சாகவில்லை. பொதுமக்கள்தான் பலியாகி உள்ளனர். உங்களிடம் பேசி பயனில்லை என்றெல்லாம் காயத்ரி ரகுராமை கண்டித்து பலர் கருத்து பதிவிடுகிறார்கள்.


