
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
முழு அடைப்புப் போராட்டம் குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக அமைதியாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இளம்பெண் உள்ளிட்ட 12 பேரை பரிதாபமாக, கடுகளவும் மனிதநேயமின்றி குருவிகளை சுட்டுக் கொல்வது போல் சுட்டுக் கொன்றிருக்கிறது அதிமுக அரசு.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்க்க வந்த உறவினர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவர் கொல்லப்பட்டார்.
இவ்வாறு, இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பிறகும் முதல்வர் பழனிசாமியோ, அமைச்சர்களோ இதுவரை தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வரவில்லை.
பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அதிமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே, துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் மே 25-ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ரத்து செய்துவிட்டு தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் ஆபத்தாக உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதில் முழுமையாகத் தோற்றுவிட்ட அதிமுக அரசு பதவி விலகக் கோரியும் மே 25 (இன்று) முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி திமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் இன்று நடைபெறும் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, திக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், தொழிலாளர் அணி நிர்வாகிகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.


