கர்நாடக ஆளுநரின் முடிவு முட்டாள்தனமானது – ராம்ஜெத்மலானி கொந்தளிப்பு

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்தன. முதல்வர் பதவியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு விட்டுக்கொடுத்த காங்கிரஸ் அந்தக் கட்சியை ஆட்சி அமைக்கக் கோரி, ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.

அதேசமயம் 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியது. இந்தப் பரபரப்பான சூழலில் ஆளுநர் வாஜுபாய் வியாழக்கிழமை முதல்வராகப் பதவி ஏற்க எடியூரப்பாவுக்கு நேற்று இரவு அழைப்பு விடுத்தார். இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் நேற்று நள்ளிரவு விசாரித்த உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில், இன்று காலை 9 மணிக்கு எடியூரப்பா இன்று மாநிலத்தின் 23-வது முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், ஆளுநர் வாஜுபாய் வாலாவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வழக்குத் தொடர்ந்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய ஒட்டுமொத்த அதிகாரத்தையும், தான் வகிக்கும் பதவியையும் தவறாகப்பயன்படுத்திவிட்டார் எனத் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனு வரும் 18-ம் தேதி காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் தாக்கல் செய்தமனுக்களோடு சேர்த்து விசாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியிடம் கர்நாடக ஆளுநர் செயல் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார்

அப்போது அவர் கூறுகையில், ’’கர்நாடக ஆளுநரிடம் பாஜக என்ன கூறியிருக்கிறது, அதை வைத்து, அந்த ஆளுநர் வாஜுபாய் வாலா முட்டாள்தனமான முடிவு எடுத்துள்ளார். ஆளுநரின் முடிவு என்பது, ஊழலையும், குதிரைபேரத்தையும், வெளிப்படையாக அழைப்பிதழ் வைத்து அழைப்பதுபோல் இருக்கிறது.

ஆளுநர் தனக்கு அரசியலமைப்புச்சட்டம் கொடுத்த பதவியையும், தகுதியையும் சட்டத்துக்கு விரோதமாகப் பயன்படுத்திவிட்டார். நான் எந்தக் கட்சிக்கும் விரோதமாகவோ, ஆதரவாகவோ பேசவில்லை’’ என ராம்ஜெத் மலானி தெரிவித்தார்.

Leave a Response