ஐபிஎல் – ஹைதராபாத்தை சிதறடித்த சென்னை

புனே மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி, தவான் கேன் வில்லியம்ஸன் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. தவான் 79 ரன்களும், வில்லியம்ஸன் 51 ரன்களும் எடுத்தனர். சென்னை தரப்பில் ஸ்ரதுல் தாகுர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் வலுவான பந்துவீச்சைக் கொண்ட ஹைதராபாத் அணிக்கெதிராக 180 என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் ராயுடு ஆகியோர் தொடங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி சென்னை அணியின் வெற்றியை எளிதாக்கியது. ஹைதராபாத் பந்துவீச்சைச் சிதறடித்த வாட்சன் – ராயுடு ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவர்களில் 134 ரன்கள் குவித்தது. வாட்சன் 57 ரன்களில் வெளியேறினார்.

அடுத்துவந்த ரெய்னா, 2 ரன்களில் வெளியேற, ராயுடுவுடன் கேப்டன் தோனி கைகோத்தார். இந்த ஜோடி சென்னை அணியை 19-வது ஓவரின் கடைசி ஓவரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

ஹைதராபாத் பந்துவீச்சாளர்களைச் சோதித்த ராயுடு, ஐபிஎல் தொடரில், தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். சென்னை அணி தரப்பில் ஐபிஎல் தொடரில் சதமடிக்கும் 7-வது வீரர் அம்பாதி ராயுடு ஆவார். அவர், 62 பந்துகளில் 100 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

மறுமுனையில் தோனி 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான 2 போட்டிகளிலுமே சென்னை அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response