ஐபிஎல் – மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

ஐபிஎல் தொடரின் 47-லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை மும்பை அணி கடந்தது. அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் 87 ரன்னாக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய எவின் லெவிஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் இஷான் கிஷான் 12 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்த நிலையில் நடையை கட்ட மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி 2 ஓவரிகளில் ஹர்திக் பாண்டியா (36 ரன்கள்) அதிரடியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி ஆர்சி ஷார்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

இதில ஆரம்பத்திலேயே ஆர்சி ஷார்ட், பும்ரா பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேற அடுத்ததாக கேப்டன் ரகானே பட்லருடன் இணைந்தார். இருவரும் பொறுப்பான முறையில் விளையாடி அணியின் ரன் உயரத்திற்கு அடித்தளமிட்டனர். குறிப்பாக அந்த அணியின் ஜோஸ் பட்லர் கிடைக்கும் தருணங்களிலெல்லாம் பந்தை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டி மும்பை அணியினரை மிரள வைத்தார்.

இதனிடையே சிறப்பாக ஆடி வந்த ஜோடி ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சில் பிரிந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை எதிர்கொண்ட ரகானே (37 ரன்கள்), சூரியகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் சஞ்சு சாம்சன், பட்லருடன் கை கோர்த்தார்.

இருவரும் மும்பை அணியினரின் பந்து வீச்சை சிதறவிட ராஜஸ்தான் அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் 18 ஓவர்கள் முடிவிலேயே ராஜஸ்தான் அணி 171 ரன்களை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

அந்த அணியின் ஜோஸ் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் (9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்தார்.

மும்பை அணியின் சார்பாக ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Leave a Response