இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி தலைவர் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் சென்னை அணியினர் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்டுத்து ஆட்டமிழந்தனர்.
பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான மெக்கல்லம் 5, விராட்கோலி 8, டிவில்லியர்ஸ் 1, மன்திப் சிங் 7, கிராண்ட்ஹோம் 8 ரன்களில் அடுத்தடுத்து நடையை கட்டினர்.
ஒருமுனையில் போராடிய தொடக்க ஆட்டக்காரர் பார்த்திவ் படேல் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய சவுத்தி 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணி பந்து வீச்சில் ஜடேஜா 3, ஹர்பஜன் 2, வில்லி, நெகிடி தலா 1 ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது.
வாட்சன் 11 ரன்கள் எடுத்த போது உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். ஆனால் பின்னர் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடினர். ரெய்னா 25 ரன்கள் எடுத்த போது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சவுத்தியின் சிறப்பான கேட்சால் ஆட்டமிழந்தார்.
இறுதியில் டோனி – பிராவோ ஜோடி ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.