ஐபிஎல் – சென்னையை எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவிற்குப் பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் சார்பில், வாட்சன் (36), டுபிளசி (27) சிறப்பான துவக்கம் தந்தனர். குல்தீப் பந்தில் ரெய்னா (31) ஆட்டமிழந்தார். நரைன் ‘சுழலில்’ ராயுடு (21) சிக்கினார். ஆனால், கேப்டன் தோனி தனி வீரராக அசத்தினார். மாவி, ஜான்சன் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஜடேஜா 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில், சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. தோனி (43) ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் கொல்கத்தா அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை அடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய கொல்கத்தா அணியில் துவக்க வீரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். இதில் கிறிஸ் லின் 12(6) ரன்களில் நிகிடி பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இவரை தொடர்ந்து அடுத்து ஆட வந்த ராபின் உத்தப்பாவும் 6(8) ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சுனில் நரைன் 32(20) ரன்களில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 16(18) ரன்களில் ஹர்பஜன் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

அடுத்ததாக ஷுப்மான் கில்லுடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடி வந்த ஷுப்மான் கில் 32 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். ஷுப்மான் கில் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இறுதியில் ஷுப்மான் கில் 57(36) ரன்களும், தினேஷ் கார்த்திக் 45(18) ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியின் சார்பில் லுங்கி நிகிடி, ஆசிப், ஹர்பஜன் சிங், ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Leave a Response