கொலைவாளினை எடடா – புரட்சிக்கவி பாரதிதாசன் நினைவுநாள் இன்று

பாவேந்தர் பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர்.

இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

ஏப்ரல் 21 அவருடைய நினைவுநாளையொட்டி அவர் எழுதிய கவிதை …..

வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்நிலையாம் எனும் நினைவா?
உலகாள உமது தாய் மிகஉயிர்வாதை அடைகிறாள்;
உதவாது இனி ஒரு தாமதம்உடனே விழி தமிழா!

கலையே வளர்! தொழில் மேவிடு!
கவிதை புனை தமிழா!
கடலே நிகர் படை சேர்;
கடுவிட நேர் கருவிகள் சேர்!
நிலமே உழு! நவதானியநிறையூதியம் அடைவாய்;
நிதி நூல்விளை! உயிர் நூல் உரை நிச நூல் மிக வரைவாய்!

அலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை ரதமே அவை ஏறிடும் விதமே
உனததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே புரி சரி நீதி பொருள் ஜனநாயகம்
எனவே முரசறைவாய்! இலையே உனவிலையே
கதிஇலையே எனும் எளிமை இனி மேலிலை
எனவே முரசறைவாய்… முரசறைவாய்!

– புரட்சிக்கவி பாரதிதாசன்

Leave a Response