காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆகவேண்டும் – ரஜினி வலியுறுத்தல்

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது.

இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,விஷால், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்படும் முன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்.

கால் ஏக்கர், அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் நிலங்களைக் கொண்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி. தமிழக மக்களின் ஒரே குரல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான்.

கர்நாடகாவில் எனது படம் வெளியாகாமல் போனால் தயாரிப்பாளர்கள் மற்றும் கர்நாடக அரசு அதனைப் பார்த்து கொள்வார்கள்.

என்னுடைய எதிரி கமல் இல்லை, ஏழ்மை, லஞ்சம் மற்றும் வேலையின்மை. தமிழகம் காவிரிக்காக போராடும் தருணத்தில்,கர்நாடகத்தைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமித்திருக்கக்கூடாது.

காவிரி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும். ஐபிஎல் போட்டியை காணச் செல்லும் ரசிகர்களும், கறுப்புச்சட்டை அல்லது பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் போராட்டம் மவுனப் போராட்டம் என்பதால், வீட்டிலேயே கருத்துகளைக் கூறிவிட்டு போராட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்றார் ரஜினி.

Leave a Response