போர் தொடங்கிவிட்டது, எங்கே இருக்கிறீர்கள் ரஜினி?

இமயத்தில் இருந்து இறங்கி வாருங்கள் ரஜினி !

யுத்தத்திற்குத் தயாராக இருங்கள் என்று சொன்னீர்களே ரஜினி! இங்கே யுத்தம் துவங்கிவிட்டது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ரஜினி?

காவேரிக்காகச் சென்னை முதல் குமரிவரையில் தமிழகமே கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருக்கிறது. ‘தண்ணியை விடு! இல்லையேல் தனியாக விடு!’ என இந்திய தேசத்தையே அசைத்துப் பார்க்கின்ற அளவுக்கு சமூக வலைத்தளங்களில் கோஷம் எழுந்திருக்கிறது.

உண்ணாவிரதம் முதல் சாலை மறியல் வரையிலும், டோல்கேட்டை அடித்து நொறுக்குவது முதல் மத்திய அரசு அலுவலகங்களை இழுத்துப் பூட்டுவது வரையிலும் தங்களால் முடிந்தவரையில் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவரும் அவரவர் தன்மையில் களத்தில் நிற்கிறார்கள்.

நாடே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கையில் பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல், இங்கே ‘தண்ணீர்! தண்ணீர்!’ என்று தமிழகமே தொண்டைகள் வறண்டு கத்திக் கொண்டிருக்கையில் இமயமலையில் ஒத்தையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ரஜினி?

உங்களின் ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழகமல்லவா? அந்த தமிழகத்தின் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கும் காவேரிக்காக குரல் கொடுப்பது உங்களின் கடமையல்லவா?

ட்விட்டரில் நாலுவரிகள் தட்டிவிடுவதுடன் காவேரிக்கான உங்களின் கடமை முடிந்து விட்டதா?

உங்களின் உடல், பொருள், ஆவியைத் தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா என்றீர்களே! ஒரு துளி வியர்வையாவது காவேரி போராட்டத்தில் சிந்தாமல் இமயமலைக் குளிரில் கம்பளியுடன் சுருண்டு கொண்டிருக்கிறீர்களே?

தமிழர்களின் தலையாய பிரச்சனைகளில் காவேரியும் ஒன்று. அதிலேயே தலையிடாதவர் நீங்கள் எப்படி தமிழகத்திற்குத் தலைவனாக முடியும் ரஜினி ? வெற்றிடத்தை நிரப்புவேன் என்றீர்களே! வாருங்கள்! ஒரு உண்ணாவிரதப் போராட்டத்திலாவது உங்கள் முகத்தை காண்பித்து இதுவரை காவேரிப் பிரச்சனையில் எவ்வித பங்களிப்பும் தராத உங்களின் வெற்றிடத்தை நீங்களே நிரப்புங்கள்.

திரைப்படங்களில் வசனம் பேசும் பழக்கத்தில் காவேரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று ஒருமுறை அறிக்கை கொடுத்துவிட்டு அதை நூறுமுறை சொன்னது போல் பாவித்து கொண்டீர்களா?இங்கே தினமும் ஆயிரம் முறை ‘வேண்டும்! வேண்டும்! காவேரி நதிநீர் ஆணையம் வேண்டும்!’என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறப்போராட்டங்களை கொஞ்சம் இமயமலையில் இருந்து கீழிறங்கி வந்து பாருங்கள்.

உங்களுக்குத் தமிழ்நாட்டில் வாழ்வதற்கு ஆசை இருக்கிறது. தமிழ்நாட்டில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறது.தமிழ்நாட்டை ஆள்வதற்கும் ஆசை இருக்கிறது. தமிழ்நாட்டிற்காக போராடுவதற்கு மட்டும் உங்களுக்கு கசக்குகிறது!

நான் எப்படி வருவேன், எப்போ வருவேன், என்று எனக்கே தெரியாது என்றீர்கள். இப்போது நீங்கள் வரவேண்டிய ஒரு சூழல்தான். வாருங்களேன்! நீங்கள் காவேரிக்காக டோல்கேட் மீது கல்லெறிய வேண்டாம்.நீங்கள் தீக்குளிக்க வேண்டாம். ரயில் மறியல் செய்ய வேண்டாம். குறைந்தப்பட்சம் ஒரு கருப்பு துணியாவது கர்நாடகம் இருக்கும் பக்கம் துணிந்து காட்டுங்களேன்.

பார்வையற்றோர் எல்லாம் காவேரி எங்கள் கண்களுக்கு சமம் என்று போராடுகிறார்கள். நீங்கள் கண்கள் இருந்தும் காவேரியை பாராமல் கடந்து கொண்டிருக்கிறீர்கள் ரஜினி!

பா.வெங்கடேசன்.

Leave a Response