கமல் கட்சியில் பதவிச் சண்டை?

நடிகர் கமல்ஹாசன், கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அந்த மேடையிலேயே தன்னுடைய கட்சிக்கு 15 பேர் கொண்ட உயர் நிலை குழுவை அமைத்து, அவர்களின் பெயர்களையும் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மார்ச் 8-ந் தேதி சென்னையில் மகளிர் தின பொதுக்கூட்டத்தையும் அவர் நடத்தினார்.கமல்ஹாசன் நடத்திய கூட்டத்தில் கூட்டம் இல்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில் அன்றைய கூட்டத்திலேயே கமல்ஹாசன், ‘இது எண்ணிக்கையை காட்ட வந்த கூட்டம் இல்லை, எண்ணங்களை வெளிப்படுத்தும் கூட்டம்’ என்று கூறினார்.

அதேநேரத்தில், கட்சி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் கடந்து விட்ட நிலையில் இன்னும் மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் அறிவிக்கப்படாதது அவரது கட்சியினருக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் தொடங்கியிருக்கும் கமல்ஹாசன் இதற்காக பிரத்யேக இணையதளத்தையும் வடிவமைத்துள்ளார். கட்சி தொடங்கப்பட்டு முதல் இரண்டு நாட்கள் வரை உறுப்பினர் சேர்க்கை விவரம் முறையாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, முதல் இரண்டு நாளில் 2 லட்சம் பேர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இது குறித்து கமல்ஹாசன் கட்சியைச் சேர்ந்த சிலர் கூறும்போது, ‘மாவட்ட வாரியாக நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பது தொடர்பாக கமல்ஹாசன் முடிவு எடுப்பார். தற்போது நாங்கள் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியிருக்கிறோம். ஏப்ரல் 4-ந் தேதி திருச்சியில் நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எங்கள் தலைவர் அறிவிக்க இருக்கிறார்’ என்றனர்.

உயர்நிலைக்குழு பட்டியலில் இடம் பெற்றுள்ள 15 பேரில் ஒருவர் மட்டும் தான் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர். எனவே புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும்போது அதில் நற்பணி இயக்கத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தொண்டர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிதாக வந்தவர்களுக்கு உயர்பதவி அளித்ததன் மூலம் அதிருப்தியில் இருக்கும் நற்பணி இயக்கத்தினரையும் சமாதானப்படுத்திவிட்டு நிர்வாகிகளை அறிவிக்கலாம் என்று கமல் நினைப்பதால் நிர்வாகிகள் பட்டியல் வெளியாவது தாமதமாகிறது.

கட்சியில் நடக்கும் பதவிக்கான சண்டைகளால் கமல் மனவேதனை அடைந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response