கமல் ரஜினிக்கு பூஜ்யம்தான் – ஓபிஎஸ் கிண்டல்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (மார்ச் 23,2018) மாலை நடைபெற்றது. சாதனை விளக்கக் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்துரை வழங்கினார்.

அரசின் ஓராண்டு சாதனை சிறப்பு மலரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அதை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உரை தொகுப்பு உள்பட பல்வேறு தொகுப்புகளை அவர் வெளியிட, சபாநாயகர் ப.தனபால், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

இந்த அரசின் ஓராண்டு சாதனையில் மக்களுக்கும், விசுவாசத் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ஆனால் நம்மை எதிர்ப்பவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. தொண்டர்கள் சிதறாமல் ஓராண்டு கடந்ததும், அரசுத் திட்டங்களில் சாதனை படைத்து வருவதும், 5 ஆண்டுகளையும் நிறைவு செய்வோம் என்பதுமாக 3 அதிர்ச்சிகளை எதிரிகள் அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே, சிறந்த காவல் நிலையத்திற்கான விருது, சிறந்த வேளாண் பல்கலைக்கழகத்திற்கான விருது, சிறந்த திருக்கோவிலுக்கான தூய்மை விருது, சிறந்த நில ஆவணங்களை இணைய வழிப்படுத்துவதற்கான விருது, சிறந்த மின் ஆளுமை முகமைக்கான விருது, சிறந்த காகித ஆலைக்கான விருது, மனித உறுப்பு தானத்திற்கான தேசிய விருது என்று பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. இப்படி அடுக்கடுக்காய் விருதுகள் கிடைப்பதை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எதிர்க்கட்சியினர் நமக்கு எதிராக தொடுத்த அத்தனை அஸ்திரங்களையும், தர்மத்தின் வழியிலே, சத்தியத்தின் வழியிலே தகர்த்தெறிந்தோம். எதிர்க்கட்சியினர் என்ன விமர்சனம் செய்தாலும், நாங்கள் கவலைப்படவும் இல்லை, கலங்கவும் இல்லை, பயமும் இல்லை. கவலைப்படுவதும், கலங்கி நிற்பதும் எதிர்க்கட்சியினர் தான்.

அ.தி.மு.க.வை கபளீகரம் செய்வதற்குச் சில கழுகுகள் பறந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கழுகை வேட்டையாடுவதற்கு, விசுவாசத் தொண்டர்கள் வீரமிக்க வேடன்களாக வீறுகொண்டு நின்று கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதாவின் புகழ்பாடும் விசுவாசத் தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

இப்போது புதிது புதிதாக சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம்கூடக் கவலைப்படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றி பேசுகிறார்கள். சிலர் கருத்துக் கந்தசாமியாகவே மாறிவிட்டார்கள். அரசியலைப் பற்றியே தெரியாமல், அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் மக்கள் போடப்போவது பூஜ்யம் தான் என்பது உறுதி.

ஜெயலலிதாவுக்குப் பிறகு இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது என்று பரபரப்பாக பேசியவர்களும், அடுக்கடுக்காக அறிக்கைகள் விட்டவர்களும், ஆரூடம் கூறியவர்களும், ஆடி அடங்கிப்போய்விட்டார்கள். அவர்கள் சொன்ன அத்தனையும் பொய்யாக்கி ஜெயலலிதாவின் ஆட்சியை மட்டுமே உண்மையாக்கி நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response