தமிழகமுதல்வரின் உறவுப் பெண்ணுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்தது சிபிஎம் கட்சி.

கமல்-தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வேலூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர். ஆர்த்திகா-தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.ஆர்த்திகா தமிழக முதல்வரின் உறவினர்.
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் முகநூல் மூலமாகத்தான் ஏற்பட்டிருக்கிறது இருவருக்குமான அறிமுகம்.நட்பு காதலாய் மலர்ந்து பலமுறை நேரிலும் சந்தித்துமிருக்கிறார்கள்.சில தினங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து தங்களது பெற்றோர்களை அணுகியிருக்கிறார்கள். கமலின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட, ஆர்த்திகாவின் பெற்றோர் தங்களது மகளின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து தருவதாக உறுதியளித்திருக்கிறார்கள்.
உறுதியளித்த சில தினங்களுக்குள்ளாகவே அவர்கள் ஆர்த்திகாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் இறங்க,ஆர்த்திகா வீட்டைவிட்டு வெளியேறி கமலிடம் வந்துள்ளார். கடந்த 03.04.2015 அன்று இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர்.தொடர்ந்து 06.04.2015 அன்று திருமணத்தை பதிவு செய்வதற்காக வேலூர் பதிவாளர் அலுவலகம் செல்லும் போதுதான் அந்தச் சம்பவம் நடக்கிறது.
பதிவாளர் அலுவலகத்திற்கு வரும்வழியிலேயே கமலின் தந்தையை மடக்கி காவல் நிலையம் அழைத்துச் செல்கின்றனர் வேலூர் பாகாயம் காவல்துறையினர். அதைத்தொடர்ந்து டிஎஸ்பி அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்குப் பாதுகாப்புக்கேட்டு மனுக்கொடுக்கிறார் ஆர்த்திகா.
ஆர்த்திகாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் முன்னிலையிலேயே கமலை அடித்தும் மிரட்டியும் பணியவைக்க முயற்சி செய்கின்றனர்.ஆர்த்திகாவை தனியாக அழைத்து பல்வேறு முறைகளில் காதல் கணவனைக் கைவிட முயற்சி செய்துள்ளனர். ஆனால் இருவருமே தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் அவர்களைப் பிரிக்கமுடியாமல் போனது ஆர்த்திகாவின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும்.
இறுதியாக இருவரும் போடிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.நீதிமன்றம் இவர்கள் இருவரையும் நன்கு விசாரித்து கமலுடன் ஆர்த்திகா செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது.
இப்போது வேலூரில் இருக்கும் இவர்கள் அதிகார வர்க்கத்தாலோ சாதிய சக்திகளாலோ தங்களுக்கு ஆபத்து நேரலாம் என உணர்ந்து வேலூர் சிபிஎம் தோழர்களிடம் தங்களுக்கு திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர்.கட்சித்தோழர்களும் இவர்களது காதலின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தபின் அவர்கள் கோரிக்கையை ஏற்று 12.04.2015 அன்று கட்சியின் மாவட்டச்செயலாளர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் வைத்து திருமணம் நடத்திவைத்துள்ளனர்.
தங்களது தூய்மையான காதலை மிக கண்ணியத்தோடும் பொறுப்புணர்ச்சியோடும் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்கள் கமலும் ஆர்த்திகாவும்…
இனி சாதி,மதம்,அதிகாரம் இவற்றிற்கப்பாற்பட்டு இணைந்த அந்த இளம் நெஞ்சங்களைக் காப்பது இந்தச் சமூகத்தின் கடமை!-மொஹிதீன்.

Leave a Response