அதிமுக தோற்றுவிடும் என்பதால் தேர்தல் தள்ளிவைப்பு – எஸ்டிபிஐ பகிரங்க குற்றச்சாட்டு

வக்பு வாரிய தலைவர் தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு 4 மாதங்கள் கடந்த நிலையில், வக்பு வாரியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் வக்ப் வாரியத் தலைவர் தேர்தல் பிப்ரவரி 26 அன்று நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், ஆளுங்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளர் தோல்வியடைந்து விடுவார் என்பதால், அந்தத் தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக வாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர் இல்லாத காரணத்தால், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்பு வாரியத்தின் சொத்துக்களை நிர்வகிப்பதிலும், இஸ்லாமிய மக்களின் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய வக்ப் வாரியத்தின் திட்டங்கள் பல தமிழகத்தில் செயல்படுத்தபடாமல் உள்ளன. பலகோடி மதிப்புள்ள வக்ப் சொத்துக்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. இதற்கு முறையான நிர்வாகம் கட்டமைக்கப்படாததே காரணமாக கூறப்படுகிறது.

ஆகவே, வக்ப் வாரியத் தலைவர் தேர்தலைத் தள்ளிப்போடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டு குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். வக்பு வாரிய தலைவர் தள்ளிப்போகும் பட்சத்தில் ஒத்தக்கருத்துடைய இதர அமைப்புகளையும் ஒருங்கிணைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Response