அதிகாலையில் ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் — தமிழகத்தின் சிறுதெய்வ வழிபாட்டுக் காட்சிகள்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பொன்காளியம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது அதிகாலையில் ஆயிரக்கணக்கான தீப்பந்தங்களுடன் அம்மன் பவனி ஏப்ரல் 10 ஆம் நாளன்று நடந்தது. தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் நடைபெறும் அம்மன்விழா பற்றிய நிகழ்வுகளை அனைவரும் அறிந்துகொள்வதற்காக அவ்விழா பற்றிய இச்செய்தி இங்கே கொடுக்கப்படுகிறது.

சிவகிரி அருகே தலையநல்லூரில் கொங்கு வேளாள கவுண்டர்களின் குல தெய்வமான பொன்காளியம்மன் கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இக்கோயில் தேர்த்திருவிழா கடந்த மார்ச்-31 ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.அதை தொடர்ந்து ஏப்ரல்-5 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை திருவிழாவுக்காக வேலாயுத சுவாமி கோவிலிலிருந்து மேள தாளத்துடன் அம்மன் அழைத்து வரப்பட்டது.ஏப்ரல்-6 ந்தேதி கிராம சாந்தி நடைபெற்றது.கடந்த ஏப்ரல்-7 ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஊஞ்சலூர் காவிரி ஆற்றிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தீர்த்தம் எடுத்து வந்து அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிசேகம் செய்தனர்.அதை தொடர்ந்து நேற்று முன்தினம் ஏப்ரல்-8 ந்தேதி பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.நள்ளிரவு 12 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குதிரை துளுக்கு பிடித்தல் நடைபெற்றது.அம்மன் சன்னதி நேர் எதிரே 2 குதிரைகள் நிறுத்தி வைக்கப்பட்டு கொங்கு வேளாள கவுண்டர்களின் குல குருவான சிவகிரி ஆதினம் சிவா சமய பண்டித குரு சுவாமிகள் குதிரைகளுக்கு தீப தூப ஆராதனை காட்டி தீர்த்தம் தெளித்தார்.சற்று நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு குதிரைகளும் சடசடவென துளுக்கியது.அதன் பின்னர் முப்பாட்டு,மாவிளக்கு பூஜைகள் நடைபெற்று எடுப்பு தேரில் அம்மன் எழுந்தருளியதும், திருவிழா காண வந்திருந்த பக்தர்கள் பந்தம் ஏற்றும் அறிகுறியாக அதிர்வேட்டுகள் முழங்கியது.அதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாங்கள் தயார் செய்து கொண்டு வந்திருந்த துணியால் சுற்றப்பட்ட தீப்பந்தங்களை ஒரே நேரத்தில் பற்ற வைத்து உயர்த்திப்பிடித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.இதை தொடர்ந்து அம்மன் தேருக்கு முன்னும் பின்னுமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி வர பந்தங்களுக்கு நடுவில் அம்மன் தேர் ஆடி அசைந்து பவனி வந்தது அற்புத காட்சியாக இருந்தது.
ஈரோடு தொகுதி எம்.பி செல்வக்குமார சின்னையன் தனது குல தெய்வம் கோயில் என்பதால் குடும்பத்தினருடன் வந்திருந்து வெள்ளி கைப்பிடியிட்ட தீப்பந்தம் பிடித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.அதிகாலை 3.3௦ மணிக்கு தொடங்கிய தேரோட்டம் 5 மணிக்கு கோயிலை அடைந்தது.நேற்று (ஏப்ரல்-9)வண்ணார கருப்பண்ண சாமி பொங்கல் விழாவும்,அம்மன் வசந்த மண்டப புறப்பாடும் நடைபெற்றது.இன்று ஏப்ரல்-1௦ வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.பொங்கல் தேர்த் திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர் –எஸ்.கே.கார்த்திகேயன்.

Leave a Response