வைரமுத்துவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ஜீயர் பின்வாங்க மு.க.ஸ்டாலின் மனைவி காரணமா?

ஆன்மிகக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் வருத்தம் தெரிவித்து விட்டதால் வைணவச் சான்றோர்கள் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சரும், ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவன செயலாளருமான எஸ்.ஜெகத்ரட்சகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

‘தமிழை ஆண்டாள்’ என்ற ஆய்வுக் கட்டுரையில், அகத்துறை உணர்வு நிலையின் உச்சம் தொட்டு ஓங்கி உலகளந்த உத்தமியான ஆண்டாளை, ஒருசில வரிகளால் அடாதன கூறி விமர்சித்ததால் விழிகள் நனைந்து மொழிகள் குலைந்து நிற்கிறது தமிழ்நாடு.

இக்கட்டுரையை வாசித்தவுடன் என்னைப் போன்ற வைணவப் புறாக்கள் இறக்கை முறிந்ததுபோல் வேதனை அடைந்தோம். ஆண்டாள் அவதரித்த மண்ணை தொட்டு அடக்கமாய் வணங்கிவிட்டு திருப்பாவையில் மூழ்கித் திளைத்து முத்தெடுத்து பேசிய திருவாய், பிறகு எப்படி கூரிய வாள் கொண்டு எங்கள் செந்தமிழ்ப் பிராட்டியை சிறுமை செய்தது என வேதனையில் மூழ்கியது வைணவப் பேருலகம்.

‘ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்!’ என்ற பாசுரத்தில் தமிழின் சிறப்பு எழுத்தான ‘ழகரத்தை’ 11 இடங்களில் பாங்குற கையாண்ட எம் பைந்தமிழ் பாவைக்கு அமங்கலச் சொற்கள் அணிவிக்க முயன்ற அவசரத்தின் அர்த்தம் புரியாமல் வைணவச் சான்றோர்கள் வாடிப் போனார்கள். ஆதாரம் இல்லாமல் சேதாரம் செய்ய முற்பட்ட ஆய்வுக்கு என்ன அவசியம் இப்போது என்று பதைபதைத்தார்கள் வைணவ அன்பர்கள்.

ஓர் அமெரிக்க ஆய்வு சொல்லி விட்டது என்பதற்காக நம் மண்ணின் மரபு சார்ந்த மனநிலையும், அழகியல் நுகர்வும், கவித்துவத்தின் ஆழ்நிலை தரிசனமும், அகப்பொருள் தத்துவத்தின் ஆழமும் மேலைநாட்டவர்களுக்குப் புரியும் என எடுத்துக் கொள்வது பிழையால் நெய்த பிரேமை என கேட்கத் தோன்றுவது இயல்புதானே.

ஒரு பேச்சோ, கட்டுரையோ வேள்வி நெருப்பாக இருக்கலாம். அலங்காரச் சொற்கள் நாதத் தெறிப்பாக ஒலிக்கலாம். ஆனால், ஆளப்படும் கருத்துகள் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் குறையொன்றும் இருக்க முடியாது.

அந்த அவதூறு பதிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததும், ஆன்மிகக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் வருத்தம் தெரிவித்து விட்டனர். எனவே, வைணவச் சான்றோர்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விபரீத ஆய்வுகள் இனி வேண்டாம் என சுட்டிக்காட்டவும் கடமைப்பட்டுள் ளேன். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவின் வேண்டுகோளை ஏற்று திருவில்லிப்புத்தூர் ஜீயர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். எரியும் பிரச்சினை இத்தோடு முடியட்டும். உணர்வுகளைச் சீண்டாத ஆய்வுகள் மலரட்டும்.

இவ்வாறு ஜெகத்ரட்சரன் கூறியுள்ளார்.

Leave a Response