ஆண்டாளை அரசியல் ஆதாயங்களுக்காகக் கொச்சைப்படுத்தாதீர் – பாஜகவுக்கு எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி வேண்டுகோள்

இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புக்கள் படைத்துள்ளார். சில நாடகங்களும் படைத்துள்ளார். சாகித்திய அகாதமி விருது தவிர தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான் போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அவருடைய பதிவில்,,,

ஆங்கிலத்தில் ‘missing the wood for the trees’ என்ற சொல்வழக்கு உண்டு. அதாவது, ஒரு செய்தியில், எது முக்கியமோ அதை விட்டு விட்டு, தேவையில்லாததை மிகைப் படுத்துதல் என்று பொருள். அது போல்தான், இப்பொழுது ஆண்டாளைப் பற்றி நடந்து வரும் விவாதங்கள்.

ஆண்டாளைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறிய தகவல் தவறானது என்று அவர் கூறியதை எதிர்த்து வாதாடலாமே தவிர, அவர் ஆண்டாளை எப்படி அவமானப்படுத்தினார் என்பது எனக்குப் புரியவில்லை. ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர், ஆண்டாள் திருவரங்கத்தைச் சேர்ந்த ஒரு தேவதாசி என்று சொன்ன கருத்தை எடுத்துக் கூறியது எப்படி ஆண்டாளை இழிவுப் படுத்திப் பேசியதாகும் என்பது எனக்கு விளங்கவே யில்லை. அக்கருத்து தவறு என்று சொல்வதற்கு இடமிருக்கிறதே தவிர,அவர் அவமானப் படுத்தினார் என்று சொல்வதற்கு இடமேயில்லை.

பல்லவர், சோழர் காலத்தில் தேவதாசிகளுக்குக் கோயிலில், அர்ச்சகர்களுக்கு ஈடான அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றது.

சங்க காலத்தில், பாணர், விறலியர்,கூத்தர் ஆகியோருக்கு சமூகத்தில் உயர்ந்த இடம் தரப்பட்டிருந்தது என்பதைச் சங்கப் பாடல்கள் மூலம் அறியலாம். ஆனால் பிற்காலத்தில், அவர்கள் தகுதி குறைந்தது என்பது, சமூகச் சீரழிவை சுட்டுகின்றதே தவிர,இது எந்த விதத்திலும் அவர்களைப் பற்றிய விமர்சனம் அன்று.. இவ்வாறு கூறுவது சீரழிந்த நம் முகத்தை நமக்கே எடுத்துக் காட்டும் கண்ணாடி.அது போல்தான், ஆண்டாளை ஒருவர் தேவதாசி என்று கூறி அவமானப் படுத்தினார் என்று கூறும் விமர்சனம்.

ஆண்டாள் ஓர் அற்புதமான கவிஞர், சொல்லேர் உழத்தி. பன்னிரு ஆழ்வார்களிலே நம்மாழ்வருக்கு ஈடான தகுதியில் வைத்து, வைணவ சம்பிரதாயத்திலே போற்றப்பட்டு வரும் கவிஞர். அவரைத் தற்கால அசிங்கமான அரசியல் ஆதாயங்களுக்காகக் கொச்சைப் படுத்த வேண்டாம்

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response