அருவி – திரைப்பட விமர்சனம்

சினிமாவில் ரொம்ப எமோஷனல் காட்சிகள் வந்தால், இல்லை வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள கூடிய காட்சிகள் வந்தால் அழுது விடும் ஆள் நான். அப்படி சிறு வயதில் துலாபாரம் என்று படம் டிவியில் பார்த்து அழுத ஞாபகம் இருக்கிறது. அதற்குப் பிறகு ஓரளவுக்கு விவரம் அறிந்து மகாநதி படத்திற்கு அழுதிருக்கிறேன். அதற்குப் பிறகு..தெய்வமகள் படத்தின் இறுதிக் காட்சியில் விக்ரம் குழந்தை இடையே நடக்கும் காட்சிகளைப் பார்த்து அழுது இருக்கிறேன். அப்புறம் அறம். இடையில் (கத்தி, நண்பன் ,hamari adhuri kahaani என்று ஒரு ஹிந்தி படம் ) போன்ற படங்களுக்குக் கூட கண் கலங்கி இருக்கிறேன்.

இப்பொழுது அருவி..என்னைக் கட்டுப் படுத்த முடியாத அளவிற்குக் கண் கலங்க வைத்து விட்டது. சுமார் கடைசி 20 நிமிடங்கள், நீங்கள் எவ்ளோ கல் நெஞ்சுக்காரனாக இருந்தாலும், கண் கலங்கி கண்ணீர் வருவதைத் தடுக்க முடியாது.

அருவி படம் பற்றி அனைவரும் சொல்லும் போது கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுக்கிறார்களோ என்று தான் நினைத்தேன். படம் ஆரம்பித்து முதல் 10 நிமிடங்கள் பெரிய சுவாரஸ்யங்கள் இல்லாத சினிமாவாக இருக்குமோ என்று கூடத் தோன்றியது.

ஆனால் அதற்கு அடுத்து அடுத்து என்று தடம் மாறி, நிகழ் கால வழக்கை, சமூகம் பற்றிய பார்வை, எவ்வளவு கேவலமான பிறவிகள் நாம், இந்த உலகத்தில் எல்லாமே பணம் மட்டும் தான், சமூகம் நமக்கு எவ்ளோ தப்பான படங்கள் சொல்லிக் கொடுக்கிறது,

சந்தோஷம் என்றால் என்ன,பெண்,காமம்,உறவு முறைகள்,ஊடகம் அவற்றின் சுயநலப் பார்வை, என்று அடுக்கி வைத்து இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெரிய திருப்பத்தை வைத்து புழிஞ்சு எடுத்து விட்டுறாங்க.

இடைவேளைக்குப் பிறகு எவ்ளோ சிரிக்க வைக்கிறார்களோ, படத்தின் கடைசி 20 நிமிடங்கள் உங்களைக் கண் கலங்க வைத்து விடுகிறார்கள். என்ன தான் பொய் என்று தெரிந்தாலும் , மனம் அதனை ஏற்க மறுத்து விடுகிறது. உண்மையான அன்புக்கு எங்கும், சக மனிதனை அன்பு கொள்ளச் செய்யும், இல்லேன்னா நடு மண்டையில் நச்சுன்னு துப்பாக்கியையும் இறக்க சொல்லும்.

இயக்குநருக்கு சமூகம் பற்றிய இவ்ளோ அற்புதமான பார்வை இந்த வயதில் என்பது ஆச்சர்யம். இசை எல்லாம் வேற லெவல்..அப்படியே மனச கசக்கி பிழியும்னு சொல்வாங்கள்ல..அது இங்க இருக்கும்.

ஆண்களும்,பெண்களும்,அப்பாக்களும்,மகள்களும், பார்க்க வேண்டிய படம்.

தமிழ் சினிமாவில் பல பிம்பங்களை உடைத்து யதார்த்ததுக்கு மிக மிக அருகில், சுவாரஸ்யமான ஒரு படம்.

– ராதாமோகன்

Leave a Response