விஷாலின் ஊழலை நிரூபிக்கிறேன், பதவி விலகத் தயாரா? – சுரேஷ்காமாட்சி அதிரடி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் டிசம்பர் 10-ம் தேதி (நேற்று) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சங்கத் தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதால் இக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இக்கூட்டத்தை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் கண்காணிப்பார் என்று அறிவித்தது.

கூட்டத்தில் பெரும் சலசலப்பு, அவற்றிற்கு மத்தியில், சங்கத்தின் வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கும் படி செயலாளர் கதிரேசன் கேட்டுக்கொண்டார். அப்போது, பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தை நடத்த முடியாமல் போனதால், விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் மேடையில் தேசியகீதம் பாடி, கூட்டத்தை பாதியிலேயே முடித்தனர்.

இதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கூறியதாவது…

சங்கப் பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விசால்.

ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் எஃப் டி யாகப் போடப்பட்ட 7கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக யாரும் கைவைத்ததில்லை.

ஆனால் விசாலும் இதையேதான் ராகவேந்திரா மண்டபத்தில் மீடியா முன்பு சொன்னார். எஃப் டி பணம் எந்தவிதத்திலும் எடுக்கப்படாது. அப்படியே இருக்கும் என்றார்.

அவர் சொன்னபடி நடந்திருந்தால் நேற்று அரையாண்டு கணக்கை சமர்ப்பித்திருக்கலாமே?
ஏன் சமர்ப்பிக்கவில்லை நியாயமாரே? கணக்கு எங்கே எனக்கேட்டால் தேசியகீதம் பாடி கூட்டத்தை முடிக்கலாம்னு நேற்றுதான் தெரிஞ்சிக்கிட்டோம்.

உண்மையானவர்கள் கணக்கு வழக்கை பிரதியெடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்திருந்தால் ஏன் இந்த சத்தம்? சங்கடங்கள் எல்லாம். உண்மை இருந்தால்தானே கொடுப்பதற்கு?

கூச்சல் போடுறாங்க.. திட்றாங்கன்னு வீடியோ எடுத்து அனுப்புறீங்க .. ஏம்பா உன் வீட்டுல ஒரு இலட்ச ரூபா காணாமப் போனாலே லபோ திபோன்னு கத்தமாட்டே? ஆனா இங்கே வருடக்கணக்காக காப்பாற்றி வந்த 7:40 இல் 3:40 ஐ காணோம்னா கூப்பிட்டு வச்சு கொஞ்சவா செய்வாங்க. திருடனா இருந்தா என்ன செய்வீங்க? நடுத்தெருவுல கம்பத்துல கட்டி வச்சி போறவன் வர்றவன்லாம் அடிக்கமாட்டீங்க? பதவிங்கிற பேர்ல கொள்ளையடிச்சவனை நாங்க எப்படி நடத்தணும்னு எதிர்பார்க்கிறீங்க மக்களே??

3கோடியே 40இலட்சத்தை கையாடல் பண்ணியிருக்காங்கன்னு நான் நிரூபிக்கிறேன். அவர் தான் எடுக்கவில்லை என்பதை மீடியா முன் நிரூபிக்கத் தயாரா? அவர் தான் எடுக்கவில்லை என நிரூபித்தால் நான் சங்கத்தை விட்டு விலகத் தயார். விசால் எடுத்திருந்தால் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? இது விசாலுக்கு நான் விடும் நேரடி சவால். விசால் தான் இந்த 3 கோடியே 40 இலட்சத்தில் கைவைக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும். விசால் நிரூபிக்கத் தயாரா??

மேலும் பொதுக்குழு வீடியோ பொதுமக்கள் பார்வைக்கு ஏன் அனுப்பப்பட்டது? பொதுக்குழு விசயங்கள் நமக்குள்ளேதானே வைத்திருக்க வேண்டும்?

சங்கத்தின் பொதுக்குழு நடவடிக்கைகளை வீடியோவாக வெளியிட்டது தவறு என்பதையும் சங்க விதிகளின்டி சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சவாலைச் சந்திக்க விசால் முன்வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response