தமிழீழ வரைபடத்துடன் கொழும்பில் சிங்களர்கள் – பின்னணி என்ன? தீபச்செல்வன் விளக்கம்

தமிழீழ வரைபடத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள் என்ற செய்தி ஊடகங்களில் உலாவுகின்றது. பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதயகம்பன்பில சில இளைஞர்களை ஏற்பாடு செய்து இப்படி ஒரு மோட்டார் வண்டி பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். இப்படி ஒரு வரைபத்துடன் தமிழ் மக்கள் எவரும் இந்த நாட்டில் பயணம் ஒன்றை மேற்கொள்ள முடியாது.

ஆனால் தமிழீழமும் தமிழீழ வரைபடமும் சிங்கள இனவாதிகளுக்கு தேவைப்படுகின்றது. தம்முடைய அரசியல் போட்டிக்காகவும் தமது அரசியல் நலன்களுக்காகவும் தமிழீழம் சிங்கள இனவாதிகளுக்கு தேவைப்படுகின்றது. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தமிழீழத்தை கோரவில்லை என்று சத்தியமும் செய்து விட்டது.

வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை. சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை ஆட்சியாளர்களான மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் மகிந்த ராஜபக்சவும் அவரது சகாக்கள் உதயகம்பன்பில போன்றவர்களும் தமிழீழம் பற்றியே பேசுகின்றனர்.

கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்போது, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தெற்கைக்காட்டிலும் வேறுபட்ட பெறுபேற்று வரைபடத்தை காட்டியது. மகிந்த ராஜபக்ச காலத்தேர்களிலும் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த தேர்தல் முடிவுகளிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனியான நிறத்தின் மூலம் தமது தேர்தல் முடிவுகளை வெளிப்படுத்தியிருந்தன.

அப்படிப் பார்த்தால் தேர்தல் முடிவுகளிலேயே தமிழீழம் கோரப்படுகின்றது. தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. மிக கடுமையான இன அழிப்புப் போரை சந்தித்த பின்னர், தமிழ் மக்கள் காட்டிய தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானவை. அதனை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. அத்துடன் தமிழர்களின் இன பாதுகாப்பும் உரிமைத் தீர்வும் அவசியம் என்பதையும் நடைபெற்ற இந்தப் போரை நிர்பந்தித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் அணியில் உள்ள இனவாதிகள் மாத்திரம் இவ்வாறு செயற்படுகிறார்கள் என்று கூற முடியாது. இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காணும் முயற்சிகளில் ஈடுபடும் இலங்கை அரசின் பக்கம் உள்ள சிங்கள இனவாதிகள் சிலரும் இவ்வாறு செயற்படுகிறார்கள். சமஷ்டி தீர்வை சிங்கள தலைவர்கள் அன்று முன்வைத்தபோது, தமிழீழக் கோரிக்கைக்குள் தமிழர்களை தள்ளியவர்கள் சிங்கள இனவாதிகளே. மீண்டும் தமிழீழத் தீர்வை நோக்கி தமிழர்களை, சிங்கள இனவாதிகளே தள்ளுகின்றனர்.

உதயகம்பன்பில போன்றவர்களும் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளும் வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயகத்தை இணைக்காது விடுவதும், தமிழர்களின் இறைமை அடிப்படையிலான சுயநிர்ணய ஆட்சியை மறுப்பதும், தமிழ் இனத்தை தொடர்ந்தும் ஒடுக்கி அழிப்பதுமே தமிழீழகத்தை உருவாக்கும். இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை மறைத்து, அரைகுறைவான தீர்வொன்றை திணிப்பதுவே இத் தீவில் தமிழீழகத்தை உருவாக்கும்.

இன ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வை வாழவே தமிழர்கள் தமிழீழத்தை கோரினர். இன்றோ, தமிழர்களை திரும்பத் திரும்ப ஒடுக்கவும் அழிக்கவும் தமிழீழத்தை சிங்கள இனவாதிகள் பயன்படுத்துகின்றனர்.

இப்புகைப்படங்களைப் பார்த்தால், உதயகம்பன்பிலவே தமிழீழத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதுபோல இருக்கின்றது. தமிழ் மக்கள் தமிழீழத்தை கைவிட்டு குறைந்த பட்சமாக தமிழர் மண்ணில் சுயாட்சி கோரினாலும் அதை தமிழீழம் என்று சித்திரிப்பது, தமிழ் மக்கள் தமீழத்தை கைவிட்டாலும் சிங்கள இனவாதிகள் தமது அரசியல் தேவைக்காக, அதைக் கைவிட தயாரில்லை என்ற யதார்த்த நிலமையைத்தான் காட்டுகின்றது.

– தீபச்செல்வன்

Leave a Response