தினமலர் வெளியிட்ட தவறான பேட்டி. மாணவர்கள் கண்டணம்

jaffna_student_org_report_001

யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடக பிரிவு மாணவர்கள் தமிழகத்தில் உள்ள ஊடகங்களுக்கு வடக்கில் உள்ள நிலமைகள் மற்றும் இந்திய மீனவர்களுடைய சிக்கல்கள் குறித்து வழங்கிய மிக மோசமான பொறுப்பற்ற வகையிலான நேர்காணலுக்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஒன்றியம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும் இலங்கையில் எவ்வகையான மாற்றத்தினையும் உருவாக்கவில்லை,தமிழகத்தில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது தங்களுக்கான தீர்வுகள் தள்ளிப்போவதாக இலங்கை தமிழர்கள் கருதுகின்றனர் என யாழ்.பல்கலைக்கழகத்தின், ஒரு அங்கமாக இயங்கும் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் சில தரப்பினர் இந்திய ஊடகமான தினமலருக்கு பேட்டி வழங்கியுள்ளனர்.

மேற்படி கருத்தினை யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் முற்றாக நிராகரிப்பதுடன், அவர்களது சிறுபிள்ளைத்தனமான பேச்சிற்கு கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழக மக்களின் உதவிகளுக்கும், உணர்வுகளுக்கும் எமது தமிழ் சமூகம், உரிய மதிப்பையும், நன்றியையும் எப்போதும் காண்பித்து வருகின்றது.

எனவே தமிழர்களின் உரிமைகளையும் ,அபிலாஷைகளையும் பாதுகாக்க நமக்குள் பிளவுகள் உண்டாகாத வகையில் கருத்து பரிமாற்றங்களில் ஒன்றித்த நிலையில் இருப்பது அவசியமாகும்.

கருத்துச் சுதந்திரம் உண்டென கூறி தவறான தகவலை முன்னிலைப்படுத்துவது பாதகமான விளைவுகளையே உண்டாக்கும்.

இனிவரும் காலங்களில் இத் தவறுகள் உண்டாகாத வகையில் உரிய தரப்பினர் கவனமெடுக்கவேண்டும்.மேலும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களுக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தோடு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் என்றும் துணை நின்று பாடுபடும் என தெரிவித்துக் கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Response