ராஜபக்சேவின் பதவி வெறி-5 தமிழர்உயிர் பலி

கோ.சுகுமாரன்

இராமேஸ்வரம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகிய ஐவரும் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யாக தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு உயர்நீதிமன்றம் சென்ற 30.10.2014 அன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதில் லாங்லெட் கைது செய்யப்பட்ட போது பாலிடெக்னிக் மாணவர். இந்த செய்தி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மனித உரிமையில் அக்கறையுடையோர் மத்தியிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லைத் தாண்டியதாக மேற்சொன்ன ஐவரும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மீது படகில் ‘ஹெராயின்’ என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக இலங்கை காவல்துறையினர் வழக்குப் போட்டனர். இதனை அறிந்த இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய தீவிரமாகப் போராடினர்.

 

அப்போது அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார். தமிழகக் கட்சிகளும் வலுவான குரல் எழுப்பின. இதன் பின்னர், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இதுகுறித்து ஒரு புலன் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கு முற்றிலும் பொய் வழக்கு எனவும், கைதாகியுள்ள மீனவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்றும் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், மத்திய அரசு ஐந்து மீனவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர்களை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தியது.

 

தமிழக அரசும் மத்திய அரசின் உதவியுடன் தனியே ஒரு புலன் விசாரணை மேற்கொண்டது. அதிலும் போதைப் பொருள் வழக்கில் கைதான மீனவர்கள் ஐவரும் அப்பாவிகள் என தெரிய வந்தது. பிறகு இதுதொடர்பாக தமிழக அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. அதாவது, அண்டை நாடான இலங்கை விவகாரத்தில் நேரடியாக தலையிட முடியாது என்பதால், பாம்பன் பகுதியை சேர்ந்த “நிரபராதி மீனவர்கள் சங்க அறக்கட்டளை” தலைவர் அருளானந்தம் முலம் இவ்வழக்கை நடத்த ரூ. 3 லட்சம் நிதியுதவி அளித்தது. அவரும் இலங்கைச் சென்று வழக்கறிஞர்களை நியமித்து வழக்கை நடத்தினார். கீழ்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து ஐவர் உள்ளிட்ட சிலருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு நடந்த வழக்கில், கொழும்பு உயர்நீதிமன்றம் தற்போது ஐந்து மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

கடந்த ஆட்சியில் மத்திய அரசு முயற்சியால் கொழும்பில் நடந்த இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையின் போதும் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது. தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ (புதுச்சேரி), நிரபராதி மீனவர்கள் சங்க அறக்கட்டளைத் தலைவர் அருளானந்தம் (பாம்பன்), மீனவர் பிரதிநிதிகளின் தலைவர் வீரமுத்து (நாகை) உட்பட 13 பேர் கொண்ட குழு இப்பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டது. இக்குழு அரசு அனுமதியுடன் மெற்சொன்ன வெளிக்கடை சிறையில் (தமிழீழப் போராளிகள் குட்டி மணி, ஜெகன் போன்றவர்களின் கண்களைத் தோண்டி, சித்தரவதைச் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறைச்சாலை) அடைக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளும், இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் உடன் இருந்துள்ளனர்.

 

இதனிடையே, கடந்த 13.11.2013ல், காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் தில்லி சென்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோரை சந்தித்து, தமிழக – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும், இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளனர்.

 

அப்போது அவர்களிடம் சல்மான் குர்ஷித் ‘இந்த 5 மீனவர்களும் நிரபராதிகள் என இந்திய அரசு புலன்விசாரணை நடத்தி முடிவு செய்துள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. அவர்கள் போதைப் பொருள் கடத்தவில்லை. மீன் பிடிக்கச் சென்ற அப்பாவிகள். இதை இந்திய அரசு இலங்கை அரசுக்குத் தெரிவித்துள்ளது. வழக்கைத் திரும்பப் பெற்று 5 மீனவர்களையும் விடுவிக்கக் கோரியுள்ளோம்’ எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மறுநாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துள்ளனர். அவரும் சல்மான் குர்ஷித்திடம் கூறி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.

 

மோடி பதவியேற்பு விழாவிற்கு ராக்பக்சே தில்லிக்கு வருவதாக செய்தி வெளியானது. அப்போது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மீனவர்களை விடுவிக்க ராகபக்சேவிடம் கோரிக்கை வைக்க மோடியிடம் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டுமென கோரினர். தமிழக அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவும் பிரதமராகப் பொறுப்பேற்க இருந்த மோடிக்குக் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து ராஜெபக்சே மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா வருவதற்கு முந்தைய நாள் மெற்சொன்ன 5 மீனவர்களைத் தவிர்த்து இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்கள் அனைவரையும் இலங்கை அரசு விடுவித்தது.

 

இந்தச் சூழ்நிலையில்தான், தற்போது 5 மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விவகாரம் அரங்கேறியுள்ளது. தமிழகம் – புதுச்சேரி எங்கும் ராஜபக்சே, சுப்பிரமணியன்சாமி கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டுப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொழும்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன சம்பந்தம்? என சிலர் அசட்டுத்தனமாக கேள்வி எழுப்புகின்றனர். மீனவர்களை விடுவிக்க இந்திய அரசால் தொடர்ந்து முன் வைக்கப்பட்ட ஒரு நீண்ட காலக் கோரிக்கை செவிசாய்க்கப்படாமல், இந்து ஆங்கில நாளேடு தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல, இலங்கை அதிபர் தேர்தல் (ஜனவரி 2015) வருவிருக்கிற நேரத்தில் தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வந்துள்ளது. இதன் பின்னணியில் நிச்சயம் ராஜபக்சேவின் அரசியல் விளையாட்டு உள்ளது என்பது உறுதியாகிறது. தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை என்பது ராஜபக்சேவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் மிகப் பெரிய வாக்கு வங்கியை உருவாக்கும் என்பது கடந்த கால வரலாற்றை நோக்கினால் புரியும். இத்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது தமிழகத்திலும், இந்தியாவிலும் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும், அதனால், இலங்கை அரசுக்கும் ஏற்படும் நிர்பந்தங்கள் குறித்தும் ராஜபக்சே அறிந்திருக்கக் கூடும். இருப்பினும், மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டுமென்ற ராஜபக்சேவின் பதவி வெறியும், ஏற்கனவே குடி கொண்டிருக்கும் இனவெறியும் சேர்ந்து 5 தமிழர்களின் உயிர்களைப் பலி கொடுக்க தயாராகியுள்ளது.

 

இந்நிலையில், இலங்கை நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரையில் நாம் காத்திருப்போமானால், மீண்டும் நாம் ஏமாறப் போவது உறுதி என்றே தோன்றுகிறது. தூக்குத் தண்டனையை ரத்து செய்து, 5 தமிழக மீனவர்களையும் விடுவிப்பது இந்திய அரசின் கையில் உள்ளது. காங்கிரசைப் போலவே பாஜகவின் மோடி அரசும் நடந்துக் கொள்கிறது என்று கருத்து நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

 

எனவே, இந்திய அரசு இலங்கை நீதிமன்ற தீர்ப்புக்குக் காத்திராமல், இலங்கையுடனான ராஜ்ய உறவைப் பயன்படுத்தி, வழக்கைத் திரும்பப் பெற்று, 5 மீனவர்களையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே, இன்றைக்கு நாம் வைக்க வேண்டிய கோரிக்கை ஆகும். ஏனெனில், முந்தைய காங்கிரஸ் அரசுக்கும், தற்போதய மோடி அரசுக்கும் தூக்குத் தண்டனைப் பெற்று சிறையில் வாடும் 5 தமிழக மீனவர்களும் அப்பாவிகள் என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி ஒருமித்த கருத்துள்ளது. இதற்கு தமிழக மக்களிடம் இருந்து உரிய எழுச்சியும், அழுத்தமும் மத்திய அரசுக்கு எட்ட வேண்டும்.

Leave a Response