சமீபத்தில் புதுச்சேரியில் முறைகேடாக பதிவு செய்து கார் வாங்கியதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தான் அப்படிப்பட்டவள் அல்ல என்றும், தன்மீது வேண்டுமென்றே வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்றும் அமலாபால் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
“தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி, மலபார் பகுதியின் சுதந்திர போராட்ட வீரர்களால் உருவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க தின பத்திரிக்கை, பொது மக்களின் பார்வையை தன் பக்கம் ஈர்க்கவும், தன்னுடைய பத்திரிக்கை விற்பனையை அதிகரித்து கொள்ளவும், இத்தகைய மேம்போக்கான வழிகளை கையாண்டிருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறிவைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எதிராக, நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஒரு இந்திய பிரஜையாக நான், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கவும், சொத்துகள் வாங்கவும் உரிமை இருக்கிறது. ஒரு வேளை நான் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கும் அல்லது பெங்களூருவில் ஒரு சொத்து வாங்குவதற்கும் இவர்களது ஒப்புதல் தேவைப்படுமோ? கடந்த முறை நான் பெங்களூரில் பார்த்த போது, அங்கும் இந்திய ரூபாய தான் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
குறுகிய நோக்கில் சின்ன சின்ன ஆதாயங்களுக்காக, சட்ட-திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்து, நாம் நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி, போன்ற சமூக ஏற்ற தாழ்வுகளை களைய போராடுவோம். அதுவே சிறந்த போராட்டமாகும்” என கூறியுள்ளார் அமலாபால்.


