
நடிகர் விஜய் நடித்து அக்டோபர் 18 அன்று வெளியான ‘மெர்சல்’ படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் அந்தப் படத்தில் இருப்பதாகக் கூறி தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘மெர்சல்’ படம் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டிருப்பதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷாலும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷாலுக்கு சொந்தமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு விளக்கம் தெரிவித்து வருமான வரித்துறை செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
வருமான வரித்துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு, செலவை மதிப்பிட்டு வரியைக் கணக்கிடுவது (டி.டி.எஸ்.) குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. முறையாக வரி பிடித்தம் செய்யப்படுகிறதா? பிடித்தம் செய்யப்படும் வரி அரசு கணக்கிற்கு முறைப்படி செலுத்தப்படுகிறதா? அதில் ஏதேனும் விதிமீறல்கள் உள்ளனவா? என்பதைக் கண்டறியவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நடப்பு நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த நடவடிக்கைகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, நாங்கள் 400–க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்த நடைமுறைகளின் போது, சென்னையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் அலுவலகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டோம்.
அந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் 2016–17 நிதி ஆண்டில் வரி பிடித்தம் செய்யப்பட்டபின் செலுத்தவேண்டிய ரூ.50 லட்சம் மதிப்பிலான வரியை அரசுக் கணக்கில் செலுத்தவில்லை என்ற விதிமீறல் குறித்து வந்த தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வருமான வரிச் சட்ட விதிகளின்படி, பிடித்தம் செய்யப்பட்ட வரி, பிடித்தம் செய்யப்பட்ட மாத இறுதியில் இருந்து 7 நாட்களுக்குள் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கவேண்டும். அந்த வகையில் இந்த ஆய்வின்போது, மேற்படி நபர் விதிமீறலை ஒப்புக்கொண்டு, செலுத்த வேண்டிய மொத்த தொகையையும் உடனடியாகச் செலுத்துவதாக உறுதியளித்தார்.
சில பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில், நாங்கள் நடத்திய ஆய்வு நடவடிக்கையை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்துடன் இணைத்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளருக்கும், அந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வழக்கமாக மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.
இதுபோன்ற நடவடிக்கைகள், பிற சம்பவங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்கிறோம். செலவை மதிப்பிட்டு வரியைக் கணக்கிடுவதின்படி முறையாக வரி பிடித்தம் செய்து, அப்படி பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் அரசிடம் செலுத்தி, நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மெர்சலுக்கு ஆதரவாக விஷால் பேசியதால் வருமானவரித்துறை சோதனை என்று சொல்லப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்தே இச்செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சர்ச்சைகள் வரும்போது வருமானவரித்துறை விளக்கம் சொல்வது நடைமுறையல்ல என்றும் இப்போது விளக்கம் சொல்லியிருப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளதென்றும் விமர்சனங்கள் வருகின்றன.


