தைப்பொங்கல் நாட்கள் பொன்னான காலங்கள் – பாவலர் அறிவுமதி நெகிழ்ச்சி

மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் அருள்செல்வன் தொகுத்துள்ள அந்நூலின் பெயர்’சகலகலா வல்லபன்’. இந்நூல் வெளியீட்டு விழா அக்டோபர் 22,2017 அன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.விழாவில் நடிகர் ராஜேஷ், இயக்குநர்கள் சித்ராலெட்சுமணன், பேரரசு, ஈ.ராம்தாஸ், த.செ.ஞானவேல், கவிஞர் யுகபாரதி,பத்திரிகையாளர்கள் தேவி மணி, ‘மக்கள்குரல்’ ராம்ஜி,குங்குமம் கே.என். சிவராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார். விழாவை ராஜசேகர் தொகுத்து வழங்கினார்.

விழாவில், கவிஞர் அறிவுமதி பேசும் போது,

இந்த விழா ஒரு குடும்ப உணர்வை ஊட்டுகிறது. அவர் என்னைத் தாய்போல அரவணைத்தவர். என்னை அழைத்து பிலிமாலயாவில் எழுத வைத்தார். என் ஆண்தாய் போன்ற பாரதிராஜா அழைத்த போது அவரிடம் போகப் பயந்து பாக்யராஜிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன்.

‘பாமா ருக்மணி’ படத்தில் பணிபுரிந்த போது கிடைத்த இடைவெளியில் வல்லபன் என்னை, தான் இயக்கும் ‘தைப்பொங்கல்’ படத்துக்கு அழைத்தார். என்னை முதலில் உதவிஇயக்குநர் ஆக்கியது அவர்தான்.’தைப்பொங்கல்’ படப்பிடிப்புக்கு மாண்டியா போனபோது அங்கே படக்குழுவினருடன் இருந்த நாட்கள் பொன்னான காலங்கள்.அவர் சொல்லச்சொல்ல நான் எழுதிய நாட்கள் மறக்க முடியாதவை. மிகச்சிறந்த ஆளுமையாக அவர் இருந்தார்,வல்லபனின் நினைவுகளைத் தொகுத்த அருள்செல்வன் மிகுந்த பாராட்டுக்குரியவர் என்றார்.

Leave a Response