மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவைச் சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு அவர் மீது நீண்ட காலமாக பாலியல் புகார் தெரிவித்துவரும் பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘வைரமுத்துவுக்கு விருது வழங்கப்படுவதற்கு மறைந்த ஓ.என்.வி.குருப் பெருமைப்படுவார்’ என்று பதிவிட்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து, மலையான நடிகை பார்வதியும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘”ஓ.என்.வி ஐயா எங்கள் பெருமை. ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவரின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் மரியாதை வழங்குவது மிகுந்த அவமரியாதைக்குரியது” எனக் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து சில எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகளும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், வைரமுத்து விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஓ.என்.வி கலாச்சார மையத்தின் தலைவரும் மலையாள திரையுலகின் மிகச் சிறந்த இயக்குநருமான அடூர் கோபாலகிருஷ்ணன், ‘வைரமுத்து மீது இருக்கும் பாலியல் புகார் குறித்து நடுவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். வைரமுத்து எழுத்தை மட்டும் கணக்கில்கொண்டு அவருக்கு விருது வழங்கும் முடிவை நடுவர்கள் எடுத்திருக்கலாம். இந்த விருது தொடர்பாக ஏற்கெனவே வைரமுத்துவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டம் நடத்தி விரைவில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா வைரமுத்துவுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்….
வணக்கம்..
என் படைப்புகளில்
முன் கதை
பின் கதை கதாபாத்திரங்களின் உணர்வுகளை
பாடல்களில் வார்த்தைகளை அடக்கி ஆளத்தெரிந்த ஒரு
கவிஞனை தேடி அலைந்து கொண்டிருந்த நேரம்.
சங்கம் வளர்த்த
நம் முன்னோர்களின்
வழித் தோன்றல்களாக
மெய்ஞானம் அறிந்த
விஞ்ஞானக் கவிஞனை
கண்டெடுத்து
ஒருப் பொன் மாலைப் பொழுதில் விதைத்தோம்..
வார்த்தை கவிதை
வரிகள் காவியம்..
வியப்பு..!
இரண்டு வரிகளின்
இடைவெளி கதை
சொல்கிறது..
வார்த்தை புதிது
வரிகள் புதிது
என் தாய் மொழி புதிதாக
உணர்ந்தேன்..
அரை நூற்றாண்டு
அருகில் நிற்கிறோம்
என் கவிஞனை
திரும்பிப் பார்க்கிறேன்.
வில்லோடு வா நிலவே
கருவாச்சி காவியம்
கள்ளிக்காட்டு இதிகாசம்
தண்ணீர் தேசம்
மூன்றாம் உலகப் போர்..
பத்மஸ்ரீ
பத்மபூசன்
சாகித்ய அகாதமி
ஏழு தேசிய விருது
எண்ணற்ற படைப்புகள்
எண்ணற்ற விருதுகள்..
விருட்சமாய் என் தமிழ்
உயர்ந்து நிற்கிறது.
கர்வம் கொள்கிறேன்.
கேரளச் சகோதரர்களின்
பேரன்பினால்.. மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி.
எங்கள் கவிப்பேரரசு அவர்களுக்கு அறிவித்தது
அறிந்து மகிழ்வுற்றேன்.. ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதை கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை.
சமீபகாலமாக
எம் இனத்தின் மீதும்
மொழி மீதும் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ , தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும்விதமாக சில நபர்களை கொண்டு மதம், இனம் , மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப் பட இயலாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
‘இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள்”
எறியட்டும்
அவர்களின் தாகம் தீரட்டும்.
குளம் என்பது
கானல் நீர்,
நீ சமுத்திரம்.
அன்புடன்
பாரதிராஜா.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.