என் மூச்சும் பேச்சும் இருப்பும் உயிர்ப்பும் ஈழத் தமிழர்களுக்காக இருக்கும்- அறிவுமதி


கனடாவுக்கு வருகை தந்திருக்கும் கவிஞர் அறிவுமதி அவர்கள் கனடா வாழ் தமிழ் ஆசிரியர்களுக்கு புதுக் கவிதை எழுதும் கற்பித்தல் பட்டறை நடத்தினார்.
கனடா தமிழ் கல்லூரி மற்றும் “அறிவகம்” தமிழ் கல்லூரி ஆசிரியர்கள் பலரும் இதில் கலந்து பயன் பெற்றார்கள். கிராமிய சூழலில் எங்கள் தாயக தமிழ் மண்ணில் கவிதை பிறந்த அழகியல் அம்சங்களை சுவையூட்டி தமிழ் சுவை குன்றாமல் கவிஞர் அறிவுமதி அவர்கள் கற்பித்த அழகு தனி அழகு.
அழகு தமிழின் எளிமையே தமிழின் அழகுக்கு அழகு என்பதை கிராமிய சூழலில் வளர்ந்த தமிழர்களே கற்றுக் கொள்கிறார்கள் என்ற உண்மை இந்த எளிய கிராமிய மண்ணின் வாசம் மறவாத எளிமையான கவிஞரில் காண முடிந்தது.
எங்களையும் எங்கள் தாய் மண்ணின் அழகுணர்வுகளை மனதில் மீட்டிடும் வண்ணம் கவிதை உலகுக்கு எம் தமிழ் மண்ணின் பற்றோடு அழைத்துச் சென்று கவிதையின் கூறுகளை சிறப்பாக புகட்டினார்.

அன்னைத் தமிழகத்தில் இருந்து வருகை தந்த தமிழ் இன உணர்வாளர் கவிஞர் அறிவுமதி அவர்களை கனடிய தமிழ் வானொலி கலையகத்தில் வருகை தந்திருந்த போது சந்தித்து பேசியமை பெரும் மகிழ்வை தருகின்றது. .
அனைத்துலக பெண்கள் நாளுக்கு அனைத்து தமிழ் பெண்களையும் மனமார வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார் கவிஞர் அறிவுமதி அவர்கள்.
எங்கள் அனைத்து அன்னைத் தமிழகத்தின் உணர்வுள்ள தொப்புள் கொடி சகோதர தோழமைகளையும் நேரில் கண்ணுற்ற மகிழ்வை கவிஞர் அறிவுமதியை நேரில் கண்ட போது உணரப் பெற்றேன்..
தமிழ் உணர்வு சொட்டும் கனிந்த அழகு தமிழில் கவிஞர் இன உணர்வோடு வழங்கிய செவ்வி செவிக்கு மட்டுமன்றி மனதுக்கும் இனிமையாக இருந்தது.
கவிஞர் அறிவுமதியின் தமிழ் மற்றும் அழகான உணர்வுகளை போற்றும் கவிதைகள் பாடல்கள் என பல்வேறு விடயங்களை பற்றியும் எங்கள் கலைஞர்கள் கேள்விகள் கேட்ட பொழுது சிறப்பாக பதில் வழங்கியிருந்தார்.
தமிழிலும் ஈழத் தமிழரிலும் பெருமதிப்பும் எல்லையிலா அன்பும் கொண்ட கவிஞர் அறிவுமதி வார்த்தைக்கு வார்த்தை அதை வெளிப்படுத்திய அழகு தமிழுக்கே தனி அழகு எனலாம்.
“என் மூச்சும் பேச்சும் இருப்பும் உயிர்ப்பும் ஈழத்து தமிழர்களுக்காக என்றும் இருக்கும்” என செவ்வியின் இறுதியிலும் உறுதி மொழிந்தார்.
அழகாக கவி வடிக்கும் கவிஞர்கள் வாய் மொழியும் தமிழ் பற்றிய பல்வேறு தமிழின் வரலாற்று சிறப்பு தகவல்கள் பலவும் கேட்டுக் கொண்டு இருந்தாலே பெரும் மகிழ்ச்சியே.
தமிழை தன் மூச்சாகவும் பேச்சாகவும் கொண்ட அன்னை தமிழகத்தின் அறிவு தமிழை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கும் என் சக கலைஞர்களுக்கும் நிறைவை தந்தன.
கவிஞர் அறிவுமதி அவர்களோடு சில மணி துளிகள் காற்றலையில் கனடியத் தமிழ் உறவுகள் செவ்வி கேட்க கிடைத்தமையை பல உறவுகளும் மகிழ்வோடு வரவேற்றார்கள்.
அண்மையில் தமிழ்த்தேசிய இதழான “விடுதலை அறம்” இதழில் அவர் எழுதிய அழகிய கவிதை முத்துக்கள் முதல் கொண்டு அன்னை தமிழக உறவுகளின் நலம் பற்றியும் நாம் ஆவலோடு விசாரித்து அறிந்தது போல் அவரும் மிகுந்த அக்கறையோடும் ஆவலோடும் கனடியத் தமிழர்களை பற்றியும் தமிழினத்தின் ஒற்றுமை பற்றியும் அன்பாக விசாரித்து அறிந்தார்.
கனடிய மண்ணில் தமிழைக் கற்பித்து வரும் அமைப்புகளான கனடாத் தமிழ்க் கல்லூரி மற்றும் அறிவகம் என்பன கனடிய மண்ணில் வாழும் தமிழ் சிறார்கள் தமிழ் பேசும் சிறார்களாக வாழ களம் அமைத்து கல்விச் சேவையை அயராமல் கட்டமைக்கப்பட்ட நேர்த்தியான பாடத் திட்டங்களின் கீழ் ஒழுங்கமைக்கப் பட்டு சேவைகளை வழங்கி வருவது யாவரும் அறிந்ததே.
அத்தகைய தமிழ்த் தேசிய கல்வி அமைப்புக்களுக்கு வலுச் சேர்க்க நடத்தப்படும் “புலர்வு” நிகழ்வுக்கு வருகை தந்திருந்த கவிஞர் அறிவுமதி அவர்களை செவ்வி கண்ட போது தமிழ், புலம்பெயர்ந்த தமிழ் சிறார்களின் தமிழ் கல்வி, தமிழ் பெற்றோர், தமிழின உணர்வு, இலக்கியங்கள் என பல விடயங்கள் பேசப்பட்டன.
“எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால் தமிழ் வாழும்!”
என்பன போன்ற தமிழ் உணர்வை பட்டை தீட்டும் அழகிய பொன் வரிகள் மெய் சிலிர்க்க வைத்தன.
பல கவிதைகளையும் பாடல்களையும் பகிர்ந்து கொண்டார்.
“எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்” என்ற பாடலை இனிய இசையில் பாடியும் காட்டினார் – செந்தமிழினிபிரபாகரன்.

Leave a Response