விடுதலைப் புலிகள் மீது சூழ்ச்சியோடு சேறு பூச முயலும் எழுத்துகள்- குமுறும் உணர்வாளர்

இலண்டனில் 21.03.2015 அன்று தமிழ்மொழி செயற்பாட்டகம் சார்பில் இரு நிகழ்வுகள் என்ற பெயரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இரண்டாம் அமர்வில் ஆயுத எழுத்து என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநூலில் புலிகள் மீது அபாண்டமாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளனவாம். நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த போராளிகளை விமரிசிப்பது சிங்களர்களின் சூழ்ச்சிக்குப் பலியானவர்களின் செயல் என்று சாடுகிறார் செந்தமிழினிபிரபாகரன். அவருடைய பதிவு….
” தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சை படுத்த எழுதப்பட்ட ஆயுத எழுத்தை புறக்கணிப்போம்.”
தமிழர்களை அழிக்கத் துடிக்கும் பகைகளுக்கு எதிரான போராட்டத்தை வென்றெடுக்கும் கருவிகளாக இன்று உலகெங்கும் உணர்வு கொண்ட தமிழர்களின் எழுத்துக்கள் எதிரிகளுக்கு அச்சுறுத்தல்களாக திகழ்கின்றன.
அதனை எதிர்கொள்ள எம் இனத்தில் இருந்தே சிலரை தெரிவு செய்து தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க கங்கணம் கட்டி நிற்கின்றன தமிழின விரோத சக்திகள்.
இவர்களில் சிலர் முன்னாள் போராளிகள் என்று தம்மை அறிமுகப்படுத்தி மக்களை ஏமாற்றி அரசியல் சூழ்ச்சிகளை செய்கின்றார்கள்.
இன்று எம் விடுதலைப் போராட்டம் பல எட்டப்பர்களையும் காக்கை வன்னியர்களையும் கண்டு வீழ்ச்சி அடைந்து அழிக்கப்பட்ட நிலையிலும் இரண்டகங்களுக்கு விலை போனவர்களால் வீழ்த்தப்பட்ட எங்கள் இனம் மீண்டும் மீண்டும் எழுச்சியோடு எழுந்து நின்று போராடுவதை கண்டு செய்வதறியாமல் முழிக்கின்றன தமிழின பகைமைகள்.
அந்த வகையில் தமிழினத்திற்கு பொய்களை கக்கி திணித்து மக்களுக்காக உயிரை கொடுத்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வேண்டுமென்றே சூழ்ச்சியோடு சேறு பூச முயலும் எழுத்துக்கள் சில படை எடுத்துள்ளன. இது குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
“ஆயுத எழுத்து” என்ற பொய்யுரை கற்பனை புனைவுகளை உண்மைகள் என நம்பவைக்கும் வகையில் தன்னை முன்னாள் போராளி என கூறிக் கொள்ளும் சாத்திரி என்பவரின் எழுத்துருவாக இந்திய இலங்கை அரசுகளின் பின்னணி கொண்ட சூழ்ச்சியோடு எழுதப்பட்டு நாவல் என்ற பெயரில் வேண்டுமென்றே தமிழர்கள் வாழும் தேசங்களில் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்த வெளியீட்டு நிகழ்வுக்கு எண்ணிக்கையில் மிக சொற்பமான மக்கள் மட்டுமே இது வரையில் சென்று இருக்கின்றார்கள் என்பதும் தமிழீழ விடுதலைக்கு எதிரான போக்கு கொண்ட இந்த நூலை தமிழ் மக்கள் புறக்கணித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.இந்த நூலை நூலாசிரியர் இன்றியே வெளியிட்டு வைக்க வெளி நாடுகளில் உதவும் தமிழ் உறவுகளின் மன நோக்கு எத்தகையதாக இருக்கும் என வேதனையோடு சிந்திக்க வைக்கின்ற அதே வேளை இது என்ன நோக்கில் மக்களுக்குள் களமிறக்கப்பட நினைக்கப் படுகின்றதோ அந்த முயற்சியும் முக நூல் உறவுகளால் தோற்கடிப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்றைய தினம் லண்டனில் (21.03.2015) தமிழ்மொழி செயற்பாட்டகம் சார்பில் இரு நிகழ்வுகள் என்ற பெயரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இரண்டாம் அமர்வில் ஆயுத எழுத்து என்ற புலிகளுக்கு எதிரான இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது
எதற்கும் பயன் தராத தமிழ் எழுத்து தமிழில் உள்ள ஆயுத எழுத்து. அது போன்ற தமிழ் மக்களுக்கு பயனேதும் தராத பொய்மை கருத்தை விதைக்கும் தொகுப்பை வெளியிடும் சூழ்ச்சியோடு இந்த நிகழ்வு நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது.
நிகழ்வின் முதலாம் அமர்வாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசியல் சமூக நிலைமைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது எனவும் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்ட பேராசிரியர் கணேசன் அவர்கள் முக்கிய உரையாற்றினார் எனவும் அறியப்பட்டாலும் நிகழ்வின் இரண்டாம் அமர்வு இந்த நூல் வெளியீட்டு நிகழ்வாக அமைந்துள்ளது.
எதிர் நின்று போராடும் எதிரியை விட இழிவானவர்கள் உள்ளிருந்து பிரிந்தபின் கூடி பழகிய தோழமைகளுக்கும் உண்ட வீட்டுக்கும் இரண்டகம் செய்யும் மனிதர்கள்.
நூலாசிரியர் நூல் மீதான திறனாய்வை ஏற்று அதற்கு ஏற்புரை வழங்கி பதில் கொடுத்து நடக்கும் நூல் வெளியீடுகள் மட்டுமே எழுத்தாளனின் சிந்தனைகளின் நியாயங்களை ஏற்றுக் கொள்ள வைக்க உதவும். இது போன்ற எழுத்தாளர் பங்குபற்றாமல் நிகழ்த்தப்படும் நூல் வெளியீடுகள் வெறுமனே வியாபார நோக்குடையவையாகவும் கருத்து பரப்பும் நோக்கு கொண்டவையாகவும் மட்டுமே இருக்கும்.
இந்த நூலை வெளியிட தமிழின விரோத சக்திகள் தேர்ந்தெடுக்கும் நபர்களும் எப்படி இருப்பார்கள் என்பதை நாம் எழுதி சுட்டத் தேவையில்லை.
இன்று விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்கள் மாற்றியக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் கூட மன்னிக்கலாம். கருத்துக்களை ஊன்றி கவனிக்கலாம்.
ஆனால் உள்ளிருந்து தலைமையின் நன்மதிப்பு பெற ஒரு காலத்தில் ஓடி ஒட்டி உழைத்தவர்கள் இன்று தாம் வளர்ந்த தாய் வீட்டுக்கே இரண்டகம் ஆற்றும் பொய்மை கருத்துக்களை புனைந்து முன்வைக்கின்றார்கள் என்றால் அவர்களை மக்கள் ஒரு போதும் மன்னிக்க போவதில்லை.
அவர்களை அவர்கள் மனச்சான்றை தவிர எவரும் திருத்த முடியாது என்பதே உண்மை. கால நீரோட்டத்தில் காணமல் போகும் சருகுகளின் சல சலப்பிற்கு உன்னதமான ஈகைகளை கொண்ட எங்கள் உயர்வான விடுதலைப் போராட்டம் கலங்கி நிற்கப் போவதில்லை. தடைப்படப் போவதும் இல்லை.
நேற்றைய இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமை உரை வழங்கிய வாசுதேவன் என்பவர் தானும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகவும் இந்த “ஆயுதஎழுத்து” நாவலில் சாத்திரி குறிப்பிடும் சம்பவங்கள் மற்றும் நபர்கள் பலவும் தனக்கு தெரிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார் என்றும் இறுதியாக, புலிகள் நடத்திய போராட்டம் மக்களுக்கான போராட்டம் அல்ல என்றும் அது அவர்களது அதிகாரத்திற்காக நடந்த போராட்டம் என்றும் குறிப்பிட்டதாகவும் அறிகின்றோம்.
வேலிக்கு ஓணான் சாட்சி என இப்படி விலை போகும் பலரின் நியமிப்புக்களை இந்திய இலங்கை அரசுகள் விலை பேசி களமிறக்கி உள்ளன என சில செய்திகள் கூறுகின்றன.
புலிகளுக்கு எதிராக பரப்பும் சிந்தனைகளை அவர்களாகவே சொல்லவில்லை. திட்டமிடட்ட சூழ்ச்சியில் கருத்து பரப்புரை செய்கிறார்கள் என்பதும் புரிகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மாசுபடுத்தி மக்களிடம் இருந்து தூக்கி எறியும் காழ்ப்புணர்வை கக்க வைக்க யார் யார் இவர்கள் போன்ற கருவிகளை முனை தீட்டி இரண்டகர்களாக உருவாக்கி பயன்படுத்துகின்றார்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
” இவர்களை விமர்சிக்கும் அவசியம் தேவை தானா?” என எம்மில் பலருக்கு எண்ணத் தோன்றலாம்.
இவர்கள் யாரை திருப்திப்படுத்த இப்படி எழுதுகின்றார்கள், பேசுகின்றார்கள் என மக்களே நன்கு அறிவார்கள். எனவே இரண்டகங்களை தோலுரிக்க அதிகம் வேலை எவர்க்கும் இங்கு இல்லை.
மக்களை ஒரு நாள் ஏமாற்றலாம். இரண்டு நாள் ஏமாற்றலாம். எப்பொழுதுமே ஏமாற்றலாம் என்றில்லை. ஆயுத எழுத்து திட்டமிட்ட பொய்கள் கொண்ட பரப்புரை வடிவம் என்பது மக்கள் அறிந்த உண்மை. இந்த உண்மையை எழுதிய சாத்திரி தமிழ் மக்களுக்கு ஒரு சாபம் என்பதும் பலர் குறிப்பிட்ட உண்மை. எனவே அந்த கவலையும் இல்லை.
விடுதலைப் புலிகளை தவறு சொன்ன/சொல்லும் எவருமே தமிழ் மக்களுக்காக புரட்சியை கையில் எடுத்தோ அகிம்சை வழியிலோ இன்றளவும் எதிரிகளோடு எதிர்த்து மக்களுக்காக போராடுகின்றார்கள் என்றாலாவது இவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என ஒரு கணம் எம் மக்கள் நினைத்து குழப்பமடையக் கூடும்.
புலி எதிர்ப்பு காழ்ப்புணர்வு அரசியலை செய்வதை கடந்து அல்லல்படும் எம் மக்களுக்காக ஒரு துரும்பை கூட விடுதலையை வென்றெடுக்க முன் வைக்க நினைக்காத இவர்கள் முன்னாள் என்றால் என்ன இந்நாள் என்றால் என்ன எம் இனத்துக்கு பயன் அற்றோரே.
உண்மையான போராளிகளோடு போராளிகள் மாற்றுக் கருத்துக்களை கடந்து தெளிவு படுத்தல்கள் குறித்து பேசிக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் வெட்டியாக எதிரிக்கு ஊளையிடுவோருக்கு பதில் சொல்வது விழலே.
உண்மையான ஒரு போராளி கருத்து முரண்களால் போராட்ட அமைப்பில் இருந்து விலகி இருந்தாலும் ஒருபோதுமே போராட்டத்தை இழுத்து வீழ்த்தும் முயற்சிகளில் தமிழரின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் சக்திகளுக்கு துணை போகும் பரப்புரைகளில் ஈடுபட மாட்டான். அப்படி செய்பவனை துரோகி என்றே உலகம் தூற்றும்.
மரண வீட்டில் ஒப்பாரி வைக்கும் மக்களைப் பார்த்து, உங்கள் ஒப்பாரிச் சத்தம் எங்கள் தூக்கத்தைக் கலைக்கிறது என்று ஆவேசத்தைக் காட்டும் சிலரின் பார்வைகள் வியப்புக்கும் விசனத்திற்கும் உரியவையே..
எமது நாடு இருக்கும் நிலையில் எம் மக்கள் வாழும் அவல வாழ்விடையே ஆயுத எழுத்து போன்ற எம் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிக்கும் சூழ்ச்சி எழுத்துக்கள் பற்றிய எம் தேடல்கள் அவசியமற்றவையே.
ஆயுத எழுத்தும் அதை முதன்மை படுத்தும் தேவையும் இந்திய இலங்கை அரசுக்களுக்கே இன்று தேவையானது. தமிழ் இனத்தின் விடுதலையை நேசிக்கும் எவருக்கும் தேவையற்றதே.
திறனாய்வு கூட்டங்களுக்கு நான் எதிரானவள் அல்ல. அவை ஆதாரபூர்வமாக உண்மைகளை மட்டும் எடுத்து இயம்பும் என்றால். மாறாக பொய்கள் புனைந்து சேறு பூசும் சதிகளை திறனாய்வு என சொல்லிவிட முடியாது.
ஆயுத எழுத்தும் அதற்கான ஆதரவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கை பரப்பும் திறனாய்வு நிகழ்வு என பார்க்க முடியாது மாறாக எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்க முயலும் விரோத சக்தியின் சதி வலைகளுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்ப ஆடும் பொம்மலாட்ட நாடகமே!
புலிகளை பற்றி பொய்யர்கள் விமர்சிப்பார்கலாம். அவர்களை எதிர்த்து புலிகள் உண்மைகளை நிரூபிக்க வேண்டுமாம். சாத்திரி யார் அவர் புலிகளில் என்ன செய்தார்? அவருக்கு தெரிந்தவை என்ன தெரியாதவை என்ன.. பின்னணி என்ன என பல விடயங்கள் சில காலங்களின் முன்பே அம்பலமாகி விட்டது. புலிகளுக்கு வேறு வேலை இல்லையா சாத்திரி மாதிரியானவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க? அத்தனை சிந்தனைப் பக்குவம் இல்லாதவர்களா புலிகள்?
விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீரம் மிக்க போராட்டத்தையும் திறனாய்வு செய்யும் அனைவரிடமும் சொல்லிக் கொள்வது ஒன்று தான்…
எவரையும் திறனாய்வு செய்யுங்கள். ஆனால் நீங்கள் அவர்களை கடந்து எம் இனத்துக்காக போராடி அதீத நன்மைகளை சாதனைகளை வெற்றி வரலாற்றை எம் மக்களுக்கு படைத்துக் காட்டி விட்டு எதிரி கண்ணில் துரும்பாக இருந்து துருத்திக் கொண்டு எம் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை விமரசியுங்கள். எம் மக்கள் அப்பொழுது வேண்டுமானால் ஒரு வேளை உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறதோ என சிந்திக்கக்கூடும். அது வரை உங்களை நம்ப எம் மக்கள் முட்டாள்கள் அல்ல. விமர்சனம் பேசி மக்கள் போராளிகளாக உருவாகலாம் என கனவு காணாதீர்கள்.
இரத்தமும் சதையுமாக எம் விடுதலைப் போராட்டத்தில் நாம் கொடுத்த விலைக்கு முன்பு நீங்கள் வீசும் சேறு எதையும் செய்து விட முடியாது. உங்களை துரும்பாகவேனும் நம்பலாமா எனக் கூட எம் மக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்பது உறுதியானது.
பயனற்ற ஒன்று பற்றிய ஆழமான பார்வையே பயனற்றது!
இன்று தமிழர்களாகிய நாம் எல்லோரும் எந்த அமைப்பை சார்ந்தவர்கள் என்ற வேறுபாடுகள் கடந்து எங்கள் தமிழ் இனத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் ஒருவர்க்கு ஒருவர் தோள் கொடுத்து தமிழின எதிரிகளுக்கு எதிராக போராட நேர்மையாக முன்வர வேண்டும்.
அதை விடுத்து எதிரியோடு நின்று போராட்டத்தை வீழ்த்த நினைப்பது தவறு மட்டுமல்ல. கொடிய இனத்துரோகம் என்பதையும் புரிந்து கொண்டு பிரிவினை களைந்த தமிழர்களாக ஒன்றிணைவோம்.

Leave a Response