எங்கிட்ட மோதாதே, உத்தரவு மகாராஜா – 2015 இல் தொடரும் நட்டியின் வெற்றிப்பயணம்

தமிழகத்திலிருந்து இந்தித்திரையுலகுக்குப் போய் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராகக் கொடிநாட்டிக்கொண்டிருக்கும் நட்டி என்கிற நட்ராஜ் தமிழில் நாயகனாக நடித்த சதுரங்கவேட்டை வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த கதம்கதம் அண்மையில் வெளியானது. அந்தப்படத்திலும் அவருடைய நடிப்புக்கு நல்லவரவேற்பு கிடைத்திருக்கிறது.
அவர் நல்லவனாக நடித்த நாளை, சக்கரவியூகம், முத்துக்குமுத்தாக, மிளகா போன்ற படங்கயில் அவருக்குக் கிடைத்த வரவேற்பை விட கெட்டவனாக நடித்த சதுரங்கவேட்டை, கதம்கதம் ஆகிய படங்களுக்கு வரவேற்பு அதிகம் கிடைத்தது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டால், இதை மக்களிடம்தான் கேட்கவேண்டும் என்று சொல்கிறார்.
இந்தித்திரையுலகம் பற்றியும் முழுமையாகத் தெரிந்திருக்கும் அவர், இந்தித்திரையுலகம் தமிழ்த்திரையுலகம் இரண்டையும் ஒப்பிட்டு எது சிறந்தது என்று கேட்டால், கொஞ்சமும் தயக்கமின்றி சந்தேகமில்லாமல் தமிழ்த்திரையுலகம்தான் சிறந்தது என்கிறார்.
இங்கு வழக்குஎண், மஞ்சப்பை போன்ற படங்களை எடுத்து வெற்றிபெறமுடியும் மக்கள் அதை வரவேற்பார்கள். ஆட்டோக்காரர், மளிகைக்கடைக்காரர் நாயகன் என்று சொல்லி அவர்களை வைத்துக் கதை எழுதிப் படமெடுக்கமுடியும் ஆனால் இந்தியில் அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அதனுடைய வியாபார எல்லையை விரித்துக்கொண்டே போகவேண்டும் என்பதற்காக மண்ணின் அடையாளங்களைத் தொலைத்துவிட்டுப் படமெடுக்கின்றனர் என்று சொல்கிறார்.
2001 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் யூத் படத்துக்குப் பிறகு அவர் தமிழில் ஒளிப்பதிவு செய்யும் படமான புலி படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படம் முடிந்ததும் அவர் இயக்குநர்பாண்டிராஜின் உதவியாளரான ராமு இயக்கும் எங்கிட்டமோதாதே படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப்படத்தை ஈராஸ்இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அதற்கடுத்து உத்தரவு மகாராஜா என்றொரு புதியபடத்திலும் நடிக்கவிருக்கிறார். இவற்றில் எங்கிட்டமோதாதே படத்தின் படப்பிடிப்பு மே இறுதியில் தொடங்கவிருக்கிறதாம்.
ஏழெட்டு ஆண்டுகளாக வெற்றிக்காகப் போராடிக்கொண்டிருந்த நட்டிக்கு 2014 இல் வெற்றி கிட்டிவிட்டது. 2015 இலும் அது தொடரும் என்கிற நம்பிக்கை தெரிகிறது.

Leave a Response