
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் வருகிற 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மணிமண்டப திறப்பு விழா அக்டோபர் 1-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறவிருக்கிறது.
இது சம்பந்தமாக சிவாஜி கணேசன் குடும்பத்தின் சார்பில் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில்,
மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எங்கள் அப்பா மீது வைத்திருந்த பாசம், மரியாதை நிமித்தமாக அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று விரும்பி அதற்கான அரசாணையைப் பிறப்பித்திருந்தார். அதன்படி அப்பாவுக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டப திறப்பு விழா வருகிற 1-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
ஆனால் இவ்விழாவில் தமிழக முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் எங்கள் குடும்பத்துக்கும், சிவாஜி ரசிகர்களுக்கும் பெரும் வேதனை மற்றும் ஏமாற்றம் தரும் செய்தியாகும்.
தமிழ் சினிமா மூலம் நமது கலாச்சாரத்தை, தமிழ் மொழிக்கு பெருமைகளைச் சேர்த்தவர் எங்கள் அப்பா! மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கனவுத் திட்டமான சிவாஜியின் மணிமண்டப திறப்பு விழாவில் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் மற்றும் அனைத்து அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.
சிவாஜி கணேசன் குடும்பத்தினரின் இந்த வேண்டுகோளை ஏற்று நல்ல ஒரு முடிவை அறிவிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்
என்று பிரபு குறிப்பிட்டுள்ளார்.


