தமிழர்கள் நிராகரிப்பு – வைகோ கண்டனம்

தென்னக ரயில்வே “குரூப் டி’ பணியாளர் தேர்வில், தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக  நவம்பர் 3. 2014 அன்று  அவர் வெளியிட்ட அறிக்கை:

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் “குரூப் டி’ பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தத் தேர்வுக்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் விண்ணப்பங்களை ரயில்வே வாரியம் நிராகரித்திருக்கிறது.

அரசு பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும்போது இணைக்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் பெற வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், ரயில்வே தேர்வு வாரியம் “குரூப் டி’ பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களில் இணைக்கப்பட்ட நகல் சான்றிதழ்களுக்கு அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் இல்லை என்று நிராகரித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

எனவே, சான்றொப்பம் இல்லாமல் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ள தமிழக, தென் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரின் விண்ணப்பங்களையும் ரயில்வே தேர்வு வாரியம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழக இளைஞர்களை “குரூப் டி’ தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Response