அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் என்ன செய்யலாம்? – தமிழக அரசு புது விளக்கம்

தமிழகத்தில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். இந்த நடைமுறை செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

டிராபிக் ராமசாமி மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை நீதிபதி துரைசாமி விசாரித்தார். அப்போது நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில், செப். 5-ம் தேதி வரை வாகன ஓட்டிகளிடம் அசல் உரிமம் கேட்டு கட்டாயப்படுத்தப்படாது என தமிழக அரசு
உத்தரவாதம் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, நீதிபதி துரைசாமி இந்த வழக்கை தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் 5-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, டிராபிக் ராமசாமி மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், மோட்டார் வாகனச் சட்டத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற விதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஏற்கனவே உள்ள மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ள விதிகள் தான் தற்போது அமலில் உள்ளன. விபத்துகளைக் குறைக்கவே அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை 32 ஆயிரம் சாலை விபத்துகளில் 9,881 பேர் பலியாகி உள்ளனர். எனவே விபத்துகளைக் குறைப்பதற்காகவே அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாற்று ஓட்டுநர் உரிமம் பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என போக்குவரத்து ஆணையரும், அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் காவல்துறை இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையரும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Response