வேலைக்காரன் பட வெளியீடு தள்ளிப்போனது

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மோகன்ராஜா இயக்க சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் வேலைக்காரன் படம்,செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.

இப்போது அப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. இதை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,,,

‘வேலைக்காரன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்பட வேண்டியதுள்ளது. ‘தனி ஒருவன்’ வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகவுள்ள படமென்பதால், மிகத் தரமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். மேலும், தணிக்கைச் சான்று பெற புதியவிதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அந்தப் பணிகளும் முடிவடைய 3-4 வாரங்கள் தேவைப்படுகின்றன.

ஆகையால் செப்டம்பர் 29-ம் தேதி எங்களுடைய படம் வெளியாகாது. இதற்காக அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம். பெரிய முதலீட்டுப் படம் என்பதால் ஏதாவது ஒரு பண்டிகைக் காலத்தில் வெளியிட்டால் மட்டுமே சரியாக இருக்கும். அக்டோபரில் பல்வேறு படங்கள் வெளியாகவுள்ளன. நவம்பரில் விழாக் கொண்டாட்டங்கள் ஏதும் இல்லை. ஆகையால் டிசம்பர் வெளியீடு மட்டுமே சரியாக இருக்கும் என தேர்வு செய்துள்ளோம். கிறிஸ்துமஸ் தின விடுமுறையில் படத்தை வெளியிடுங்கள் என்று விநியோகஸ்தர்களும் கேட்டுக்கொண்டதால், டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

நீண்ட கால காத்திருப்புக்காக ரசிகர்கள் மற்றும் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், இந்தக் காத்திருப்புக்கு ஒரு சிறப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் படம் பார்க்கும் போது நீங்கள் உணர்வீர்கள்.

இவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response