பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் எதிரொலித்த அனிதாவின் அநியாய மரணம்

தகுதியிருந்தும் நீட் தேர்வால் மருத்துவம் படிக்கமுடியாமல் மரணமடைந்த அனிதாவின் துயரம் நாட்டையே உலுக்கியது. அது கேளிக்கை நிகழ்ச்சியான பிக்பாஸையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் அதுபற்றிப் பேசப்பட்டது.

அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தன் உரையை கமல் துவங்கினார். சமூகக் கோபமும் நுண்ணுணர்வும் இல்லாமல் தன்னைச் சுற்றி எது நடக்கிறது என்பதே அறியாமல் சுயநலத்துடன் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியின் இடையிலும் சமூகவுணர்வையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார்.

அனிதாவின் மரணம் போன்றவை இனி நிகழக்கூடாது. என்ன செய்ய வேண்டும். வருந்துவதற்கு மனம் இருப்பது மட்டும் போதாது. இனி நடக்காமல் இருப்பதற்கு மூளையும் வேண்டும். இதற்கு மருந்தென்ன? இதற்கான ஆற்றல் உள்ளவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்போம். இல்லையெனில் வெட்கித் தலை சாய்க்க நேரிடும்’ என்பதாக அவரது உரை அமைந்தது.

கமலின் இந்தப்பேச்சுக்கு பரவலாக வரவேற்பு இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா மரணம் குறித்து, நீட்டுக்கு எதிராக கமல் அழுத்தமான பேச்சு. வாழ்த்துக்கள் கமல். பிக்பாஸ் நிகழ்வில் நீட் தேர்வுக்கு எதிராக கமல் பேச்சு ஆச்சரியமாக இருந்தது.. முழுக்க முழுக்க வணிகமயமான ஸ்பான்சர் நிகழ்ச்சியில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, சமூக அவலங்களைப் பேசுவது அரிதிலும் அரிதானது. அதை இன்றைய கொந்தளிப்பான சூழலில் கமல் பயன்படுத்திக் கொண்டார். நான் முதன்முதலாக ஒரு டிவி ரியாலிட்டி ஷோ வை வாழ்த்துகிறேன் என்று பலர் சொல்லியிருக்கின்றனர்.

அதேசமயம், கமல் நீட்டுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசவில்லை. நீட் என்ற சொல்லையே அவர் கவனமாகத் தவிர்த்திருந்தார். இதுபோன்ற மரணங்கள் இனி தடுக்கப்பட வேண்டும் என்றார். நீட் தேவையா, தேவையில்லையா என்பதை விளக்குவது ஒரு தலைவனின் கடமை இல்லையா? என்கிற விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response