
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள தங்கை அனிதாவின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு சீமான் , நல்லதுரை, மணி.செந்தில் மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் சீமான்,
மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றியபோதே எதிர்த்திருக்க வேண்டும் என்று திமுக-வை குற்றஞ்சாட்டினார். அம்மாவின் ஆன்மாவோடு உட்கார்ந்து பேசுபவர்கள் அனிதாவின் ஆன்மாவோடும் பேசியிருக்க வேண்டும் என்று அதிமுக-வை விமர்சித்தார்.
இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் விதமாக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே கல்வி என்றெல்லாம் திட்டமிட்டு காய்நகர்த்தி வரும் பாஜக அரசின் கோரமுகத்தின் இன்னொரு வடிவமே இந்த நீட் தேர்வு முறையாகும்.தமிழக அரசு ஏற்கனவே சட்டமியற்றி பெற்றிருக்கிற 69% இட ஒதுக்கீட்டு முறைக்கு முற்றிலும் எதிராக உச்சநீதிமன்றம் இந்த நீட் தேர்வு முறை திணிப்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு நடந்திருக்கிற கொடும் அநீதி. இது கல்வியில் நடந்திருக்கும் இனப்படுகொலை. இனரீதியாக உயிரினை பறித்தால் மட்டுமல்ல இனம்பார்த்து உரிமையைத் திட்டமிட்டுப் பறித்தாலும் இனப்படுகொலை தான் என்று சீமான் கூறினார்.


