
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் தான் குழுமூர். அந்த கிராமத்தில் ஒரு சிறிய அறையின் அளவில் சிமெண்ட் பூசப்படாத, தரை கூட போடப்படாத வீட்டில் ஒரு சுமை தூக்கும் கூலித் தொழிலாளியின் மகளாக பிறந்தவர் தான் அனிதா. இந்த பின்புலத்திலிருத்து படித்த அனிதா 12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் 1176. கட் ஆஃப் மதிப்பெண் 196.75.
சிறிய வயதிலேயே தன் தாயை இழந்த அனிதா, மருத்துவராகி ஆரம்ப சுகாதார நிலையங்களை உயர்த்த வேண்டும் என்ற கனவுடனே வளர்ந்திருக்கிறார். அந்த கனவுகளை நிறைவேற்றுவதற்கான அத்தனை தகுதிகளையும் உடைய மதிப்பெண்ணை கடுமையாக உழைத்து அவர் எடுத்திருந்தார்.
இந்திய அரசு திணித்த அயோக்கியத்தனமான நீட் தேர்வு அனிதாவின் மருத்துவக் கனவினை பறித்தது. அனிதா மட்டுமல்ல, ஏராளமான ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவினை குழி தோண்டி புதைத்தது. இதனை எதிர்த்து டெல்லிக்கு சென்று உச்சநீதிமன்றம் வரை முறையிட்டு சட்டப் போராட்டம் நடத்தினார் இந்த 17 வயது எளிய மாணவி அனிதா. நீதிமன்றம் பார்ப்பனிய நீட் தேர்வினை நீக்க மறுத்துவிட்டது.
பார்ப்பனர்களும், பணக்காரர்களும் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்பதே நீட் சொல்லும் நீதி. தமிழகத்தில் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும் பார்ப்பன பாசிச பாஜக அரசு நீட் தேர்வினை தமிழகத்தின் மீது திணித்தது. பாஜகவின் எடுபிடியாக செயல்படும் தமிழக அதிமுக அரசும் மாநில உரிமைகளை மொத்தமாக மத்திய அரசிடம் அடகு வைத்து தமிழக மாணவர்களை ஏமாற்றியது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் சேர்த்து போராடிய அனிதா, தன் கனவினை இழந்ததால் உயிர்விட முடிவெடுத்துவிட்டாள். இது தற்கொலையல்ல. பார்ப்பன பாஜக அரசு செய்த பச்சைப் படுகொலை.
தர்மம் வென்றது என்று சொல்லி, பார்ப்பன மனுதர்மத்தை தூக்கிப் பிடித்து, ”உனக்கெல்லாம் எதற்கு மருத்துவக் கல்வி?” என்று சொல்லி அனிதாவை கொலை செய்திருக்கிறது இந்திய பாஜக அரசு. நம் தமிழ்க் குழந்தையின் உயிரை மத்திய அரசு பறித்திருக்கிறது.
இன்று காலை முதலேயே அந்த கிராமம் முழுவதையும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. குழுமூர் கிராமத்திற்குள் வரும் அரசுப் பேருந்தினை நிறுத்தியது. வெளியூர்களிலிருந்து வரும் சாதாரண மக்களை மிரட்டி திருப்பி அனுப்பியது. இப்படி அனிதாவிற்கு நீதி கேட்க மக்கள் திரண்டு விடக்கூடாதென்று அனைத்து வழிகளையும் அடைத்தது தமிழக அரசின் காவல்துறை. வெளியூர்களிலிருந்து பேருந்துகளிலிருந்து வருபவர்கள் குழுமூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள செந்துறையிலேயே நிறுத்தப்பட்டனர். குழுமூருக்கு பல தோழர்கள் 9கி.மீ நடந்தே வந்து சேர்ந்தனர்.
காலை 7 மணீயளவில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் சென்றோம். காவல்துறையின் கட்டுப்பாட்டில் அமைதியாக இருந்த ஊரில் முழக்கமிட ஆரம்பித்ததும், ஏதோ ஒரு குரலுக்காகவே காத்திருந்ததைப் போல கிராம மக்கள் எங்களுடன் வந்து முழக்கமிட ஆரம்பித்தனர்.
நீட் தேர்வினை ரத்து செய்யும் வரை அனிதா உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என காலையில் போராட்டத்தினை மக்கள் தொடங்கினர். தொடர்ந்து அந்த போராட்டத்தினை மாலை வரை நடத்தி வந்தனர். தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து அனிதாவின் உடலை அடக்கம் செய்ய சூழ்ச்சி செய்து அதனை முடித்திருக்கிறது.
நீட் தேர்வினை முழுமையாக ஒழிப்பது மட்டுமே அனிதாவின் மரணத்திற்கு கிடைக்கக் கூடிய நீதியாக இருக்க முடியும். அனிதாவைப் போன்றே நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் அனிதாவிற்காக குழுமூருக்கு வந்து கண்ணீர் வடித்தனர்.
அனிதா ஒரு மருத்துவராக வந்திருந்தால், அரியலூர் மாவட்டத்தின் அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்திருப்பார். ஆனால் பாசிச பாஜக அரசு ஒரு தலைமுறையின் நம்பிக்கையினை சிதைத்திருக்கிறது. நாம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பிடுங்கி ஒரு நூறாண்டு நம்மை பின்னோக்கி தள்ளியிருக்கிறது.
அனிதாவைப் போன்று இன்னொரு உயிர் இந்த மண்ணில் போகக் கூடாது. நீட் தேர்வினை ஒழிப்பதற்கான போராட்டங்களை தமிழகம் முழுதும் தொடங்குவோம். மாணவர்களும்,. இளைஞர்களும், ஜனநாயக சக்திகளும் நீட் தேர்வினை நிரந்தரமாக ரத்து செய்ய போராட்டங்களை துவக்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.


