காயத்ரியை ஏன் கண்டிக்கவில்லை கமல்?

 • பல அறிவுக் கொழுந்துகள் என்னிடம் “சாரு, உங்களுடைய உயரம் என்ன, கெத்து என்ன, நீங்கள் போய் இந்தக் காமன்மேன் பார்க்கும் பிக் பாஸ் ஷோவைப் பார்க்கலாமா, ஷேம் ஆன் யூ” என்று சொன்னார்கள். முந்தாநாள் அந்த டான்ஸர் பெண் சுஜா (பெயர் சரிதானே?) தன் வாழ்க்கை பற்றி கன்ஃபஷன் அறையில் நம்மிடம் – அந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் 2 கோடி தமிழர்களிடம் (ஓவியா இருந்த போது நாலு கோடி) – சொன்னார். கண்ணீர் கன்னத்தில் வழியவில்லை. கலங்கிக் கலங்கி நின்றது. வாய் விட்டு அழவில்லை. தமிழ் சினிமாவும் தமிழ்க் கலாச்சாரமும் எப்ப டிப்பட்ட ஒரு கேவலமான நிலையில் இருக்கிறது என்பதை அந்தப் பேச்சிலிருந்து அறிந்து கொண்டேன். தன்னை எல்லோரும் ஐட்டம் டான்ஸர் ஐட்டம் டான்ஸர் என்றே அழைத்ததால் சினிமாவில் டான்ஸ் ஆடுவதையே நிறுத்தி விட்டேன் என்றால் அந்தப் பெண். என் அப்பா எங்களை விட்டுப் போய் விட்டார். நானும் அம்மாவும் என் தங்கையும்தான். தங்கை வேலைக்குப் போய் விடுவாள். அம்மா ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவார். (உடம்பு சரியில்லை.) நான் மட்டும்தான் வீட்டில் பெட்டில் படுத்துக் கிடப்பேன். ஷூட்டிங்கும் இருக்காது. யாரும் கூப்பிட மாட்டார்கள்.
  சரி, நீங்களே சொல்லுங்கள், உங்கள் வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்தால் கெஸ்ட் வந்திருக்காங்கன்னு சொல்வீங்களா, ஐட்டம் வந்திருக்குன்னு சொல்வீங்களா? ஐட்டம்ங்கிறது ஒரு பொருள் இல்லியா? இனிமே யாரையும் ஐட்டம்னு சொல்லாதீங்க என்றார் அந்தப் பெண்.
  இதுதான் தமிழ் சமூகம். நாம் பார்க்கும் ஐட்டம் டான்ஸ்களின் பின்னால் உள்ள கதை இது. இதனால்தான் பிக் பாஸ் பார்க்கிறேன்.

  dear kamal, சாதி பற்றிக் குறிப்பிட்டது குறித்த உங்கள் கடுமையான கண்டனத்தைப் படித்து நான் எழுதியிருந்த மன்னிப்பை வாசித்திருக்கலாம். ஒரு விஷயம் இன்னமும் நெருடுகிறது. காயத்ரி என்ற பெண் அங்கே சேரி பிஹேவியர் என்று சொன்னது racist தாக்குதல் இல்லையா? ஹேர் என்று அவர் சொன்னதைப் பற்றி பலமுறை கண்டித்த உங்களால் சேரி பிகேவியர் என்ற ரேசிஸ்ட் தாக்குதலை ஏன் கண்டிக்க முடியவில்லை? நிச்சயமாக அந்தச் சமயத்தில் உங்களுக்கு காயத்ரி மீது soft corner இருந்ததை பார்வையாளர்களாகிய நாங்கள் உணர்ந்தோம். அந்த மென்மையான அணுகுமுறைக்குக் காரணம் தெரியவில்லை.

  – சாருநிவேதிதா, எழுத்தாளர்

  Leave a Response