ஆளுநர் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு நாட்களுக்குள் செய்யவேண்டும்?

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று கடிதம் கொடுத்தனர். இதனால் அடுத்த கட்டமாக ஆளுநர் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்வி தமிழகமக்களிடம் எழுந்துள்ளது.

இதுபற்றி முன்னாள் சட்டப்பேரவைச் செயலாளர் செல்வராஜிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் 233 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர் முதல்-அமைச்சராக இருப்பார்.

அந்த வகையில் 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார்.இப்போது 19 எம்.எல். ஏ.க்கள் முதல்வருக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளதால் இந்த ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாகவே கருத வேண்டி உள்ளது.

மெஜாரிட்டி இழந்த அரசை நீண்ட நாள் கவர்னர் அனுமதிக்க முடியாது. அதனால் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வருக்கு உத்தர விட வேண்டும்.

அப்படி உத்தரவிட்டால் சட்டசபையில் முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் இந்த ஆட்சி தப்பிக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று விட்டால் முதல்-அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த சூழலில் 89 எம்.எல். ஏ.க்கள் கொண்ட தி.மு.க. வுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் பின் வாசல் வழியாக தி.மு.க. ஆட்சிக்கு வராது என்று கூறி இருப்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று கவர்னர் யோசிப்பார்.

அப்போது அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் வேறு யாரையாவது முதல்-அமைச்சராக்க விரும்பினால் அதற்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். அவர்கள் அனைவரும் கையெழுத்து போட்டு மீண்டும் கவர்னரிடம் கொடுக்க வேண்டும். அப்போது தான் புதிதாக ஒருவர் முதல்- அமைச்சராக முடியும்.

117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்காவிட்டால் சட்டசபையை கலைக்க மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்வார்.

இப்போதைய சூழலில் சட்டசபையை 10 நாட்களுக்குள் கூட்ட கவர்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் சென்று சட்டசபையை கூட்ட உத்தரவிடுமாறு எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response