நான் இல்லாமல் ஓவியா கிடையாது – கொந்தளிக்கும் காயத்ரி ரகுராம்

விஜய் தொலைக்காட்சியில், கமல் தொகுத்து வழங்கிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதே வேளையில் புதிதாக சிலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

ஸ்ரீ, ஜூலி, ஷக்தி உள்ளிட்ட பலர் வெளியேற்றப்பட்ட வேளையில் கடந்த வாரம் காயத்ரி ரகுராம் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் பலரும், காயத்ரி ரகுராமின் சேரிபிஹேவியர் என்று சொன்னது உட்பட பல்வேறு நடவடிக்கைகளால் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்திற்கு திரும்பிய காயத்ரி ரகுராம், தான் ஒரு ஒன் மேன் ஆர்மி என்று ட்வீட் செய்துள்ளார்.

ஓவியா ஆர்மி என்றதொரு பெயரில் ஓவியாவின் ரசிகர்கள் தனியாக ட்விட்டர் கணக்கு தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ சப்போர்ட் காயத்ரி என்ற பெயரில் இயங்கி வரும் ட்விட்டரில் தளத்தில் வெளியான செய்தி ஒன்றையும் ரீ-ட்வீட் செய்துள்ளார் காயத்ரி ரகுராம்.

அவர் ரீ-ட்வீட் செய்த செய்தியில் கூறியிருப்பதாவது:

இருட்டு இல்லையென்றால் வெளிச்சத்துக்கு முக்கியத்துவம் இருக்காது. வில்லன் இல்லாமல் நாயகன் கிடையாது. காயத்ரி ரகுராம் இல்லாமல் ஓவியா கிடையாது. பிக் பாஸை நடத்தும் ஊடகம் பசியோடும், பேராசையோடும் உள்ளது. தங்களது வெற்றியைக் காட்டி மற்ற போட்டி ஊடகங்களை வெல்லப் பார்க்கிறது. இப்போது நாயகனும் இல்லை, வில்லனும் இல்லை. தங்களது போட்டியில் அவர்கள் ஓவியாவை முன்னிறுத்தி மற்ற ஒவ்வொரு போட்டியாளரின் நற்பெயரையும் அழித்தார்கள்.

போட்டியாளரின் நற்பெயர் மட்டுமல்ல, அவரது ஒட்டுமொத்த குடும்பத்தின் நற்பெயரையும் அழித்தார்கள். ஊடகம் மக்களுக்கு பொழுதுபோக்கை தரவேண்டும். ஆனால் இவர்கள் வெறுப்பையும், கண்ணீரையும் வரவழைத்தார்கள். உண்மையைக் காட்டி நல்லதை உருவாக்க வேண்டுமே தவிர அதை மறைத்து அழிவை உருவாக்கக் கூடாது.

எனக்கு எப்போதுமே காயத்ரி ரகுராம் மீது மரியாதை இருக்கிறது. சமீபத்தில் பேசிய ஓவியா உட்பட அனைவரின் மீதும் அதே மரியாதை இருக்கிறது. மக்களை முட்டாளாக்கி நாயகன், வில்லன் என்ற பிம்பத்தை ஊடகத்தால் உருவாக்க முடியாது. ஒரு நாள், மக்கள் விழித்துக்கொள்வார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response