சவாலை ஏற்ற அன்புமணி, புறமுதிகிட்டு ஓடிய அமைச்சர் செங்கோட்டையன்

அண்மையில் சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது பள்ளிக்கல்வித்துறையை விமர்சித்து சிலர் பேசி வருவதாகவும், மேலும் சிலர் அறிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு பேசுபவர்கள் என்னுடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் நின்று விவாதம் செய்ய தயாராக உள்ளனரா ? என்றும் சவால் விடுத்தார். மருத்துவர் இராமதாசு மற்றும் அன்புமணி ஆகியோரை மனதில் வைத்தே அவர் இந்த சவாலை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, நேரம் மற்றும் இடத்தையும் (ஆகஸ்ட் 12-ந் தேதி மாலை 4 மணி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கம்) அறிவித்தார். இதுகுறித்து பதிலளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், ‘அவர்கள் பேச்சுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்கள் மீதே வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு வந்து என்னிடம் பேசட்டும்’ என்று கூறியிருக்கிறார்.

அமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்கிய செங்கோட்டையன் இப்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும் அதேபோல் கலந்தாய்வு நடத்தாமல், கையூட்டு வாங்கிக்கொண்டு இடமாறுதல் ஆணை வழங்குவது ஏன்? என்பது தான் எனது வினா. இதுகுறித்து விவாதிப்பதற்காகவே அமைச்சரை அழைக்கிறேன்.

என் மீதான குற்றச்சாட்டு ஏதேனும் இருந்தால் அதை விவாதத்தின்போது முன்வைக்கலாம். அதற்கு விளக்கமளிக்கிறேன். அதை விடுத்து ஒன்றும் பெறாத காரணங்களை கூறி விவாதத்திற்கு வராமல் புறமுதுகிட்டு ஓடுவது வீரமல்ல. நேர்மையும் அல்ல. செங்கோட்டையன் உண்மையாகவே நேர்மைத் திலகமாக இருந்தால் வெளிப்படையான முறையில் விவாதிக்கலாம்.

அதன் மூலம் தமிழக அரசியலில் ஆக்கப்பூர்வமான கலாசாரத்தை ஏற்படுத்தலாம். இந்த விவாதம் கல்வித்துறை வளர்ச்சி சார்ந்தது தானே தவிர தனிநபர்களின் வெற்றி தோல்விக்கானது அல்ல. அதனால் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெறும் விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் வருகைக்காக காத்திருப்பேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தொடக்கத்தில் சவால் விட்ட அமைச்சர் செங்கோட்டையன் இப்போது பின்வாங்குவது ஏன்? என்பது பலரின் வினாவாக இருக்கிறது.

Leave a Response