தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. பள்ளி

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் செக்கடிக்குப்பம், திராவிட இயக்கக் கொள்கைகளைப் பறைசாற்றும் சிற்றூர்.
இது ஒரு பகுத்தறிவு கிராமம்.

1968 இல் தனது திருமணம் தொடங்கி, 2017 வரை 1700 க்கும் மேற்பட்ட பகுத்தறிவு சுயமரியாதைத் திருமணங்களை சுயமரியாதை வீரர் மா. அர்ச்சுனன் அவர்கள் இந்த ஊரில் நடத்தி இருக்கின்றார்கள்.

1994 இல் வைகோ பேரவை தொடங்கி இளைஞர்களை ஒருங்கிணைத்தார்.1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் குடை சின்னத்தில் கோட்டப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது, விழுப்புரம் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகின்றார்.

நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களைத் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் நல்வழிப்படுத்த தமிழர் கலையான சிலம்பத்தை செ.செல்லக்கண்ணு, செ.குமாரசாமி ஆகியோரைக் கொண்டு பயிற்றுவித்து வருகின்றார்.

ஆணுக்குப் பெண் நிகர் என்பதை நடைமுறைப்படுத்தி, வரதட்சணை முதலான பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து வெற்றி கண்டவர்.இயற்கையைப் பேணிக் காக்கும் விதமாக 1985 களில் ஐந்து ஏக்கர் அரசு நிலப்பரப்பில் ஊர் மக்களை ஈடுபடுத்தி, பனை மரங்களை வளர்த்துச் சாதனை படைத்தவர். பெண்கள் படும் துயரை உணர்ந்து மதுக்கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வருபவர்.

சித்த மருத்துவராக இருந்து, உடல் நோய் அகற்றும் பெரும்பணியைச் செய்து வருபவர். மக்களின் அறியாமை நோயை நீக்க, பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வருபவர்.குழந்தைகளுக்குத் தனித்தமிழில் பகுத்தறிவுப் பெயரிட்டு, தமிழ் காக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.

சங்கத் தமிழன், தனித்தமிழ், இராவணன், தமிழ்வேந்தன், செந்தமிழ்க் கணினி, யாழ்முல்லை, செந்தமிழ்ச் சிந்து, செந்தமிழன், விண்ணறிவு, விண்ணரசன், கனியரசன், தனியரசு, தமிழ்த்தென்றல், செஞ்சோலை, கன்னல்மொழி, பகுத்தறிவாளன்,
கப்பல் ஓட்டிய தமிழன் யாழ் தமிழ், தமிழ் மறவன், இளந்தமிழன், கயல்விழி, தமிழ் இனியன், சுடர்க்கனி, தமிழ்க்காவலன், செந்தமிழ்க்குறிஞ்சி, தங்கத்தமிழன், அனிச்சமலர் போன்ற தனித்தமிழ்ப் பெயர்களைத்தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வாயார அழைத்து மகிழும் சிற்றூர் செக்கடிக்குப்பம்.

அவரது மகனும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளருமான பேராசிரியர் அ. பெரியார், தந்தை பெரியார் ஈ.வெ.ரா. பள்ளியை சங்கிலிக்குப்பத்தில் நடத்தி வருகின்றார். அப்பள்ளியில் 250 பிள்ளைகள் படித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

அவர்கள் அனைவருக்குமே திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சியை பாவலர் தமிழ் மகிழ்நன் அளித்து வருகின்றார்.
அது ஒரு தனிப்பாடமாக பயிற்சி அளிக்கப்படுகின்றது. மனவளக்கலைப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.

இப்போது அங்கே உள்ள அனைத்து மாணவ மாணவியரும் குறைந்தது 500 குறட்பாக்களை மனப்பாடமாக ஒப்பிக்கின்றார்கள்.
அவர்களுள், செ.பெ. சங்கத் தமிழன் (6ஆம் வகுப்பு), ஜீ. தமிழ்வேந்தன் (8 ஆம் வகுப்பு), ம. செந்தமிழ்ச் சிந்து (8 ஆம் வகுப்பு)
ஆகிய இரண்டு மாணவர்களும், ஒரு மாணவியும் 1330 குறட்பாக்களையும் மனப்பாடமாக ஒப்பிக்கின்றார்கள்.

சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை, திருச்சி திருமூலநாதன் அறக்கட்டளை ஆகிய இடங்களில் திருக்குறள் முற்றோதி, பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளனர்.வரிசையாக முழுமையாக ஒப்பித்தல், எண்ணைக் கூறினால் குறளைச் சொல்லுதல் போன்ற திறன்களை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இன்று அவர்கள் தாயகம் வந்து, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.அப்போது, அவர்களிடம் தலைவர் ஒவ்வொரு அதிகாரங்களின் பெயர்களைக் கூறியதும், அந்த அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைத் தங்கு தடை இன்றி அருவி போல ஒப்பித்தனர்.குறுக்கும் நெடுக்குமாகக் கேட்டபோதும், அவர்கள் உடனுக்குடன் ஒப்பித்ததைக் கேட்டு அனைவரும் வியந்தனர்.

தலைவர் வைகோ அவர்கள் அக்குழந்தைகளுக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்கள்.மாணவர்களுக்கு இந்தப் பயிற்சியை, திருக்குறள் கவனகர் பாவலர் தமிழ் மகிழ்நன் தொடர்ந்து அளித்து வருகின்றார். அவருக்கும் பொன்னாடை அணிவித்தார்கள்.

இப்பயிற்சி குறித்து, பாவலர் தமிழ் மகிழ்நன் அவர்களுடைய கருத்துகள்:

என் சொந்த ஊர் திருக்கழுக்குன்றம். எம்.ஏ. (பொது மேலாண்மை) படித்தேன். தாய்த் தமிழ்ப்பள்ளியை நடத்திய குழுவில் இணைந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டேன். புலவர் ஏறு இறைக்குருவனாருடைய தொடர்பால் திருக்குறளின் மீது எனக்கு மிகுந்த நாட்டம் உண்டாகியது.

எனது பிள்ளைகள், செம்பரிதி ஏழு அகவையிலும், யாழிசை ஒன்பது அகவையிலும், திருக்குறளை முற்றோதி, பல்வேறு பரிசுகளும் பெற்றபின், மகன் தந்த ஊக்கத்தினால், நானும் திருக்குறளைப் படிக்கத் தொடங்கினேன்.புலவர் ஏறு இறைக்குருவனார் மறைந்தபிறகு, அவர் வழியில் நடையிட திருக்குறளை முழுநேர வேலையாக எடுத்துக்கொண்டு, பல்வேறு ஊர்களுக்கும் சென்று, மாணவர்களுக்குத் திருக்குறளைப் பயிற்றுவிக்கத் தொடங்கினேன்.

கல்பாக்கம், வெங்கப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மறைமலை நகர்,சென்னை குன்றத்தூர், செக்கடிக்குப்பம் போன்ற இடங்களில் தொடர்ந்து குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வருகின்றேன்.இந்த ஆண்டு என்னுடைய மாணவர்கள் ஏழு பேர் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நடத்துகின்ற திருக்குறள் முற்றோதல் ஆய்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள்குரோம்பேட்டை திருக்குறள் பேரவை நடத்துகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,
300 திருக்குறட்பாக்களுக்கு மேல் ஒப்பித்து, திருக்குறள் பிஞ்சு என்கின்ற ஊக்கப் பரிசைப் பெற்றுள்ளனர்.

பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன் எனது நண்பர். அவர், செக்கடிக்குப்பம் பெரியார் அவர்களுடைய நண்பர்.
அவர் நடத்தும் பள்ளிக்கு, பொம்மலாட்டம் நடத்துவதற்காகக் கலைவாணன் சென்றபோது, என்னையும் உடன் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

தனித்தமிழ்ப் பெயர்களும், பகுத்தறிவும், தந்தை பெரியாருடைய பாதையில் செக்கடிக்குப்பத்தில் பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் அவர்கள் செய்து கொண்டு இருக்கின்ற பணிகளும், எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் ஈழ விடுதலைக்காக அவர்கள் கொண்டு இருக்கின்ற ஒத்த உணர்வும், என்னைப் பெரியாரோடும், அந்தப் பள்ளியோடும், மாணவர்களோடும் இணக்கப்படுத்தியது.

அதன்பிறகு கிழமைக்கு ஒருநாள் தொடர்ந்து அந்தப் பள்ளிக்குச் சென்று, மழலையர் நிலையில் இருந்து, அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் பயிற்சி அளித்து வருகின்றேன்.பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவாட்டி ஜெயா அவர்களும்,
பள்ளியின் தாளாளர் அ. பெரியார் அவர்களும், காட்டி வருகின்ற அளப்பரிய ஊக்கத்தினால், அங்கே திருக்குறள் ஆழ நிலை கொண்டுள்ளது.

பத்து அதிகாரங்களைப் பிழையறச் சொல்லுகின்ற நிலை, அங்கே காணப்படுகின்றது.வெற்றி பெற்று இருக்கின்ற மூன்று மாணவர்கள் சங்கத்தமிழன், செந்தமிழ்ச் சிந்து, தமிழ்வேந்தன் ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே மிகுந்த ஆர்வம் காட்டி, திருக்குறள் திறனை, மிகச் சிறப்பாகப் பெற்று இருக்கின்றார்கள்.

முற்றோதல் திறன் மட்டும் அல்லாமல், திருக்குறளைத் தெளிவாகச் சொல்லுகின்ற பாங்கு, சிறப்புக்கு உரியதாக இருக்கின்றது.
இந்த வெற்றி, தொடர்ந்து அந்தப் பள்ளியில் குறைந்தது 133 மாணவர்களையாவது முழுவதும் முற்றோத வைக்கும்வரை தொடர வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருக்கின்றது.

அதற்குப் பல்லாற்றானும் பெரியாருடைய தந்தையார் மா. அர்ச்சுனன் அவர்களும், பள்ளியின் செயலாளர் மதியழகன் அவர்களும் துணைநின்று வருகின்றார்கள். எதிர்காலத்தில் இந்தப் பள்ளி, திருக்குறள் மாதிரிப் பள்ளியாகத் திகழும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

-அருணகிரி

Leave a Response