
பிக் பாஸ் ஸ்கிரிப்ட்.
பரிசை வெல்வதற்கான அனுதாபத்தைத் தேடிக்கொள்வதற்காக அடுத்தவர்கள் அன்பை இழந்து விடுவோமோ என சகுனி மாமா மாமி சொல்லிக்கொடுத்த வசனத்தைப் பேசி அழும் ஜூலி.
அன்பு தேடி வெறுப்பு கிடைத்தாலும் தனிமையிலும் கேமரா முன் அழுவதைக்கூட தவிர்க்க முயலும் தன்மானமுள்ள ஓவியா.
இதையெல்லாம் கமலும் விஜய் டிவியும் மீட்டிங் போட்டு உட்கார்ந்து பேசி இயக்கிவிட முடியுமா. 24 மணிநேரமும் பார்த்துப் பதிவு செய்து கொண்டு இருப்பதில் கிடைக்கும் நாடகத் தன்மையுள்ள தருணங்களை தேர்ந்தெடுத்துக் கோர்த்துத் தருவதில் ஸ்கிரிப்ட் உருவாகிறது என்பதே சாத்தியம்.
கிடைக்கிற எந்தத் தருணத்தையும் தவறவிடாமல் ஊர்பேர் தெரியாத ஜூலியாக இருந்தாலும் சரி உலகறிந்த பிரும்மாண்டமான நமீதாவாக இருந்தாலும் சரி, தங்கச்சி பாசத்திலும் சினேக நெகிழ்ச்சியாகவும் தடவ பயன்படுத்திக் கொள்ளும் காஞ்ச மாடு சினேகன் தன்னை இவ்வளவு கேவலமாகக் காட்டிக்கொள்ள நிஜ வாழ்வில் ஸ்கிரிப்ட் கொடுத்தால் ஒப்புவாரா.
இல்லை இது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்தான் என்று திடமாக நம்புவோர்க்கு:
பரணி கேவலமானவன் நான் குளித்துவிட்டு உடை மாற்றுவதைப் பார்ப்பதற்காகவே அந்தப் பக்கமாக நடந்துகொண்டு இருந்தான் எனும் அதிரூப சுந்தரியின் ஷாட்டையும் எனக்கும் அச்சுப்பிச்சு ஜூலிக்கும் இடையில் உரசுவதற்காகவே பரணி உள்ளே புகுந்தான் என அம்மாடியோவ் நமீதா குற்றம்சாட்டும் ஷாட்டையும் காட்டி பரணியை அம்பலப்படுத்தினால் கேட்க யாரிருக்கிறார்கள்.
கஞ்சா கருப்பின் முன் விரோத ஸ்கிரிப்ட் படி அவரவர் கற்பனையைக் கலந்து, தற்செயல் நிகழ்வை பரணி மீது அபாண்டமான பழியாக இவர்கள் போடுவதை, ஜூலியின் பொய்யைக் காட்டி, அம்பலப்படுத்தியதைப் போல் செய்யாமல், பிரபலங்களை விட்டுக்கொடுக்காமல் பாரபட்சம் காண்பிக்கிறார் எனும் பழியேற்க அதி புத்திசாலியான கமலுக்கு என்ன பைத்தியமா.
அவரவர் ஸ்கிரிப்ட்டை அவரவர்களே எழுதிக்கொள்ள களம் அமைத்துக் கொடுத்திருப்பதோடு கமல் விஜய் டிவியின் பாத்திரங்கள் ஓவர். நாட்கள் செல்லச் செல்ல காயத்ரி ஹீரோயின் ஆவதோ ஓவியா வில்லியாவதோ அவரவர் எழுதிக்கொள்ளும் ஸ்கிரிப்ட்டில்தான் இருக்கிறது.
– விமலாதித்தமாமல்லன்


