ஜிஎஸ்டியால் திருப்பூருக்குப் பின்னடைவு – அருண்ஜெட்லியிடம் சத்யபாமா எம்பி கடிதம்

ஜிஎஸ்டி வரியை அதிமுகவின் எல்லாத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் நடைமுறையில் அதனால் பல பாதிப்புகள் இருப்பதை உணர்ந்து, திருப்பூர் எம்.பி சத்தியபாமா டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக கோரிக்கைக் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில், “ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில அம்சங்கள் ஜவுளித்துறையில் நேரடியாக பாதிப்பை உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை போன்ற பணிகளுக்கு, 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு, பின்னர் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அது 5 சதவிகிதம் குறைக்கப்பட்டது.

ஆனால் இந்த வரிக் குறைப்பு, நூல் மற்றும் துணி உற்பத்தியில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கின்றது. ஆடைகள் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் தொடர்பாக பணிகளைச் செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால், அந்த நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி என்பது 18 சதவிகிதமாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இதுபோன்ற நிலைமை திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு பின்னடைவை உண்டாக்கிவிடும். குறிப்பாக, திருப்பூரில் சிறிய அளவிலான நிறுவனங்களே அதிகப்படியான பணிகளைச் செய்துவருகின்றன. எனவே, பாரபட்சமின்றி ஜவுளித்துறை உற்பத்தியில் உள்ள அனைத்து பணிகளுக்கும் சமமாக 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி என்பதை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, நெசவுத் தொழிலைப் பாதிக்கும் வகையில் செயற்கை நூலிழைக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதை 5 அல்லது 12 சதவிகிதம் என்ற அளவில் வரி விதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அல்லது சலுகைகளைத் திரும்பப் பெறும் வகையிலான பட்டியலில் இந்த செயற்கை நூலிழை ரகத்தைச் சேர்த்து உதவ வேண்டும்” என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் சத்யபாமா எம்.பி.

Leave a Response