விஜய் தொலைக்காட்சியில் “தமிழ்க்கடவுள் முருகன்” என்ற நெடுந்தொடர் வரப்போவதாக விளம்பரங்கள் வந்ததைத் தொடர்ந்து நாம்தமிழர்கட்சியின் துணை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில்,
அன்பிற்கு இனிய விஜய் தொலைக்காட்சி நிறுவனர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு வணக்கம்.
தமிழகத்தில் இயங்குகின்ற முக்கியமான காட்சி ஊடகங்களில் ஒன்றான உங்கள் தொலைக்காட்சியில் முன்பு இருந்த ஆங்கில எழுத்தை நீக்கிவிட்டுத் தமிழில் விஜய் என்று வைத்து இருப்பதற்கு எமது பாராட்டுகள். முற்றிலும் நவீன மயப்படுத்தப்பட்ட மனித வாழ்வியலில் நாகரீகத்தின் இடைச்செருகல் தொடர்ந்து நடந்துகொண்டே வருகின்றது. இது எல்லாக் காட்சி ஊடகங்களிலும் நிரம்ப இருக்கின்றது.
விஜய் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, சூப்பர் சிங்கர் தொடங்கி எத்தனையோ நாடகங்கள், குறிப்பாக வடமாநிலங்களில் ஓடுகின்ற, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நாடகங்கள், தமிழில் உருவான நாடகங்கள் எனத் தினம்தோறும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சிகூடப் பெருப்பாலான இளையோர்களை ஈர்த்து நடந்துகொண்டு இருக்கின்றது. சில பிரபலங்களின் அந்தரங்கங்களை, தினந்தோறும் அவர்கள் வாழுகின்ற வாழ்வியலைப் பொதுவெளியில் பரப்புவது கூட இந்த மண்ணில் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிரானது. இருந்தபோதும் இதை நாங்கள் வெளிப்படையாக எதிர்க்காதத்திற்குக் காரணம், இதில் எந்தப் பழைய மரபுகளின் திரிபுகள் சாத்தியமில்லை என்பதாலும், பிரபலங்களின் வாழ்க்கை மண்ணின் வெகுமக்கள் உளவியலில் இருந்து வேறுபட்டது என்பதாலும் இதைக் கனத்த மனதோடு கடந்துகொண்டு இருக்கிறோம்.
சமீபத்தில் உங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் “தமிழ்க்கடவுள் முருகன்” என்ற நெடுந்தொடர் வரப்போவதாக அறிகிறோம். இந்தத் தொடரின் தலைப்பைப் பொறுத்தவரை மிகப்பெரிய மகிழ்ச்சி முருகன் தமிழர்களின் கடவுள் என்பதைத் தலைப்பாக வைத்தமைக்கு. ஆனால் அந்த விளம்பரத்தில் வரும் முருகன் காலில் “கட் ஷூ” போட்டுக்கொண்டு தாண்டுவது மிகுந்த அனர்த்தனமாக இருக்கிறது.
தமிழ்ச்சமுதாய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையிலும், அதன்பிறகு வந்த புனைவுகளின் அடிப்படையிலும் இங்கே மூன்றுவகையான முருகன் இருக்கிறார்.
ஆரிய முருகன் : இதில் சிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த இரண்டாவது மகனாகவும், பிள்ளையாருக்கு அண்ணனாகவும், வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவரையும் மணந்த இரண்டு பொண்டாட்டி காரராகவும், “முருகு” எனும் “அழகினை” மறைத்து “சுப்பிரமணியன்” என்ற ஆரிய சமஸ்கிருத பெயரினை தாங்கிவருகின்ற, பூணூல் அணிந்த முருகன்.
திராவிட முருகன் : கடவுள் இல்லை,. முருகன் என்பவர் கற்பனை கதாப்பாத்திரம், ஆரியர்கள் பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் கற்சிலை முருகன்.
தமிழர்களின் முருகன்: நெருப்பு பிழம்பாய் இருந்த இந்தப் பூமி, பன்நெடுங்காலமாய் நடந்த தொடர் மாற்றத்தினால் குளிர்ந்து, ஐந்து வகை நிலங்களாய் பரிணமித்த தமிழர் வாழ்வியலில், தலைநிலமாம் குறிஞ்சி நிலம் தந்த தலைவன் என்ற அடிப்படையில் தமிழர்களின் பெருமைக்குரிய முன்னவனாக இருக்கும் முருகன்.
இந்த முருகனுக்குச் சிவன் தகப்பன் கிடையாது, பார்வதி தாய் கிடையாது, விநாயகர் என்ற அண்ணன் கிடையாது. இந்த முருகன் தனது உடலில் பூணூல் அணிந்து கிடையாது.
உண்மையில் தொன்ம இலக்கியங்களின் ஆய்வுகளின் அடிப்படையில் நீங்கள் உங்களுடைய நெடுந்தொடரை உருவாக்க வேண்டுமெனில் நீங்கள் மூன்றாவதாகச் சொன்ன முருகனையும், அவன் வாழ்ந்த வாழ்வியல் ஆய்வுகளையும் தொடராக உருவாக்க வேண்டும். நீங்கள் ஒருவேளை முதலில் சொன்ன ஆரிய புனைவுகளின் அடிப்படையில் முருகன் என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்குவீர்கள் என்றால் அது “தமிழ்க்கடவுள் முருகன்” என்ற தலைப்பிற்கு எதிராக அமையும். பெயரினை தமிழில் வைத்துக்கொண்டு ஆரியர்கள் சொல்லுகின்ற கட்டுக்கதைகளைக் கதாப்பாத்திரத்தின் கதைக்களமாக்கினால் அது மிகப்பெரிய தவறாகும்.
மேற்சொன்ன வரலாற்று ஆய்வுகளை, தரவுகளைச் சீராய்வு செய்து, இந்த நெடுந்தொடரை இயக்குகின்ற இயக்குநருக்கு இந்தத் தொடரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பின்விளைவுகளைக் கருத்தில்கொள்ள அறிவுறுத்தல் செய்யும்படி வேண்டுகிறோம்.
ஆரியர்களின் ஆதாரமற்ற புனைவுகளை, கதைகளைச் சுமந்து இந்த நெடுதொடர் உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் ஜனநாயக ரீதியிலான மிகப்பெரிய எதிர்ப்புகளையும் அதன் பின் விளைவுகளையும் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அறிவுறுத்த விரும்புகிறோம்.
எனவே இந்தக் கதைக் களத்தையும், அதன் மீது இருக்கும் தமிழர் மரபுவழி பண்பாட்டு நகர்வுகளையும், திரிபின் மீது வரும் அசாதாரணப் பின்விளைவுகளையும் கருத்தில் கொண்டு செயல்படும்படி அன்போடு வேண்டுகிறோம்.
தமிழர்களின் தொன்ம வரலாற்றில் விளையாடாதீர்கள் என்பதை வேண்டுகோளாக இங்கே வைக்கிறோம்.
நன்றி
வீரத்தமிழர் முன்னணி