
நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக அறிவித்திருக்கும் வேட்பாளர் என்பது – ஆர்.எஸ்.எஸ். என்ற மத யானைக்கு அணிவிக்கப்பட்ட முகபடாம் என்றும், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொருத்தமான வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில்,,,
பிரதமர் மோடியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்கான ஓரங்க நாடகம் முடிந்து ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக முன்னணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சில நாள்களிலேயே கருத்திணக்க ‘‘சீன்களும்‘’ முடிந்து, அறிவிப்பு வந்துவிட்டது!
கருத்திணக்க முறை, பொது வேட்பாளர் – எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு வேட்பாளர் என்றால், ஆளுங் கட்சி உண்மையில் எப்படி நடந்திருக்க வேண்டும்?
பெயர்ப் பட்டியலில் இரண்டு அல்லது மூன்று பெயர்களைத் தேர்வு செய்து, ‘இதில் உங்களில் யாருக்கு உடன்பாடு அதனை நாங்கள் (ஆளுங்கட்சி) ஏற்கிறோம்‘ என்றல்லவா உரிய நடைமுறையைப் பின்பற்றி இருக்க வேண்டும்?
அப்படிச் செய்யாமல், ஏதோ ஒரு ‘‘சடங்காச்சாரமாக’’ எதிர்க்கட்சிகளிடம் பேசிவிட்டு, உடனடியாகத் தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டனர்!
இது வழக்கமான மோடி வித்தைகளில் ஒன்றுதான்! அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை ஏமாற்றி அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் தங்களின் வாக்கு வங்கியைப் பலப்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள ஓர் ஏற்பாடு இது!!
பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்குமேல் அங்கே உள்ள இவர், ஏற்கெனவே மாயாவதியின் கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவிருந்தார் – ஆர்.எஸ்.எஸ். என்ற மத யானைக்கு அணிவிக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட ‘‘தலித்’’ முகபடாம் இந்தத் தேர்வு!
பா.ஜ.க. உயர்ஜாதி – பார்ப்பனர் மற்றும் பெருவணிகர்களின் கட்சி என்ற உண்மை முகத்தின்மீது போடப்பட்ட ஒப்பனை இது!
அதுவும் உத்தரப்பிரதேசத்து ‘‘தலித்’’ இவர் என்ற நிலையில், இவர்களின் இரட்டை வேடத்திற்கு உ.பி. அரசியல் நிகழ்வே சரியான சாட்சிய மாகும்.
அங்கே உள்ள புதிய ‘‘சாமியார் முதல்வரான’’ ஆதித்யநாத் ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் – பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்கப்பட்டு கலவரங்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், அவர்களில் சிலரை நேரில் பார்த்து ஆறுதல் கூறிய லட்சணம்தான் என்ன?
அம்மக்கள் எல்லோருக்கும் சோப்பு கொடுக்கப்பட்டு – குளித்து ‘சுத்தமாக்கி’ – பிறகு சந்திப்பு!
அந்த சந்திப்பில்கூட, அவர்களை நாற்காலியில் உட்கார வைத்து முதல்வருக்குக் கைகொடுத்துவிடாமல் இருக்கும்படி பின்னே நின்ற ஒவ்வொரு போலீசும் ஒவ்வொரு நபரின் தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டது எங்கும் காண முடியாத விசித்திரக் காட்சி!
இந்தக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆர்.எஸ்.எஸ். ஒப்புதல் பெறப்பட்டே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்.
இரண்டாவது, தாழ்த்தப்பட்டோர் வாக்கு வங்கியைப் பலப்படுத்த, இது ஒரு பிரச்சார புதிய அரசியல் மூலதனம்.
மூன்றாவதாக, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையு டன் சேராமல் இருக்க, பிரித்தாளும் தந்திர வியூகம்!
இப்போதே பீகார் முதல்வரின் ஆதரவு – தொனியில் மாற்றம்; மாயாவதியின் குரலுக்கு ஒரு வேகத்தடை!
2019 தேர்தல் அரசியல், பின்வரும் இந்துத்துவ அரசியல் நிகழ்வுகளுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒரு பாதுகாப்பு அரண்!
இத்தனையையும் மனதிற்கொண்டே செய்யப்பட்ட ஏற்பாடு இது!
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை குடியரசுத் தலைவராக்கி அமர வைத்தது முந்தைய காங்கிரசு ஆட்சி (கேரளத்து வைக்கம் தொகுதியிலிருந்தே திரு.கே.ஆர்.நாராயணன் அவர்கள்) எனவே, முதல் தடவை அல்ல!
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சிதைந்து விடாமல், இதற்குச் சரியான பதிலடியாக அது நிறுத்தும் வேட்பாளர் தேர்வு அமைதல் அவசி யம்; அவசரம்!
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


