இலங்கையில் சனவரி 8 போல இன்னொரு போகி கொண்டாடுவோம்-தமிழ் அமைச்சர் பேச்சு.

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் அக்கராயனில் புதிர் எடுத்தல் விழா பிப்ரவரி 4 ஆம் நாளன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, சிறப்பு விருந்தினர்களாக யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண விவசாய கால்நடை சுற்றுச்சூழல் கூட்டுறவு நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,வடமாகாண கல்விவிளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேசபை தவிசாளர் நாவை.குகராசா கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட கட்சிப்பிரமுகர்கள் அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கட்சிக்கிளையின் தலைவர் அமைப்பாளர் கரன் உறுப்பினர்கள் விவசாய பெருமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வர்த்தகர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

அக்கராயன் பிரதேச கட்சிக்கிளையின் செயலாளர் கதிர்மகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பண்பாட்டு அம்சங்களுடன் கூடிய புதிரெடுத்தல் நிகழ்வு இடம்பெற்று பொங்கல் வைத்து படையல் செய்து வணங்கி அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபை விவசாய கால்நடை நீர்ப்பாசன கூட்டுறவு துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றுகையில்,….

எமது பண்பாட்டின் அர்த்தமுள்ள விழாவாக உள்ள இந்த புதிரெடுத்தல் விழாவில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. உண்மையில் இது தான் தைப்பொங்கல் விழா.பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒரு முறை எனக்குச்சொன்னார் தைப்பொங்கல்தான் உண்மையில் தமிழர்களின் மேதினம் என்றார்.

உழைப்புக்கும் அதற்கு கரங்கொடுப்பவைக்கும் நன்றி இந்த விழா எமது பண்பாட்டில் அர்த்தமுள்ளதாக காணப்படுகின்றது. எனது ஊர் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி நாம் சிறுவனாக இருந்த காலத்தில் எனது கிராமத்தில் வயல்கள் குளம் இருந்தது.ஆனால் இன்று வயல்கள் மேட்டு நிலமாகிவிட்டன.குளங்கள் குட்டைகள் ஆகிவிட்டன.

இது இன்றைய யாழ்ப்பாணத்தில் நிலை.எனவே எதிர்காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு சோறு போடப்போவது கிளிநொச்சி உள்ளிட்ட இந்த வயல் நிலங்கள்தான் எனவேதான் நாம் இரணைமடு பெருங்குளத்தின் நீர் விநியோகம் தொடர்பான விடயத்தை மிகக்கவனமாக கையாண்டோம்.

எமக்கு விவசாயப்பெருமக்களும் விவசாய வயல் நிலங்களும் அதன் வளமும் மிக முக்கியம். இன்று இந்த நாட்டிலே ஒரு மாற்றத்தை தமிழர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதற்கு நன்றியுடையதாக புதிய அரசாங்கமும் மேலைத்தேய நாடுகளும் இருக்கும் என நம்புகின்றோம்.தமிழர்கள் நன்றியுடைய சமுகம்.எனவே எமது உணர்வுகள் மதிக்கப்படும் என நம்புகின்றோம். தமிழ்நாட்டில் தைப்பொங்கலுக்கு முதல்நாள் போகிப்பண்டிகை கொண்டாடுவார்கள்.அதில் பழையனவற்றை களைவார்கள்.

நாமும் கடந்த ஜனவரி எட்டாம் திகதி ஒரு போகிப்பண்டிகை செய்தோம்.எமது உணர்வுகள் மதிக்கப்படாவிட்டால் இன்னொரு போகியை நாம் செய்யவேண்டி வரும். அதற்கு தமிழர்களிடம் ஐக்கியம் நிச்சயம் தேவை என்றார்

Leave a Response